பஹால்கம் தாக்குதலையடுத்து, சுற்றுலா, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு விசாகளில் இந்தியாவுக்கு வந்திருந்த பாகிஸ்தானியர்களைக் கணக்கெடுத்து, அவர்களை வெளியேற்றும் பணியில் மத்திய மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன.
சென்னையில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த சையது ஆரிப்( 23) என்ற இளைஞர் நுரையீரல், இதய பாதிப்பு காரணமாக மருத்துவ விசாவில் வந்து கடந்த 2 மாதங்களாக அமைந்தகரை பகுதியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இதையடுத்து காவல்துறையின் உதவியுடன் அவரை பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பும் முயற்சியில் குடியுரிமை அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் பாகிஸ்தான் இளைஞர் ஏப்ரல் 25ஆம் தேதி இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, அந்த இளைஞரின் சிகிச்சைக்கு துணையாக இருந்த இரண்டு பாகிஸ்தானியர்கள் நேற்று (ஏப்ரல் 28) காலை சென்னையிலிருந்து விமானத்தில் அபுதாபி வழியாக பாகிஸ்தானின் லாகூர் நகருக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டன.ர
அதே வேளையில், உயிரிழந்த இளைஞரின் உடல் பதப்படுத்தப்பட்டு, சென்னையில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்பு நேற்றிரவு சென்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர், லாகூர் நகருக்கு அவரது உடல் இன்று அதிகாலை அனுப்பி வைக்கப்பட்டதாக குடியுரிமைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.