ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த மார்ச் மாதம் 15ம் தே தி சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அன்றைய தினம் சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், நெஞ்சு வலி காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், இவருக்கு இதயவியல் நிபுணர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர் எனவும் தகவல் வெளியானது. இந்நிலையில் ஈவிகேஎஸ் உடல் நிலை சீராக உள்ளதாகவும், அவர் நலமுடன் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இருதய சிகிச்சை நிபுணர்கள் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும், எக்கோ கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தகவல்கள் வெளியாகின. இதனிடையே தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவருக்கு தொற்று உறுதியானது.
இதனையடுத்து கொரோனா சிறப்பு பிரிவுக்கு மாற்றப்பட்ட அவருக்கு கொரோனா தொற்றுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மூச்சு திணறல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள்வெளியாகின. மேலும் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டதை அடுத்து, ஆக்ஸிஜன் கருவி பொருத்தப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த 22ம் தேதி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து அவசர சிகிச்சை பிரிவில் இருந்து நார்மல் வார்டிற்கு மாற்றப்பட்ட ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு இருதய பிரச்சனைக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தற்போது அவர் பூரண நலமடைந்ததை அடுத்து இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக போரூர் தனியார் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.