உலக அளவில் அரசியல், விளையாட்டு, சினிமா உள்ளிட்ட துறைகளைச் சார்ந்த பிரபலங்களின் ட்விட்டர் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் ட்விட்டர் ப்ளூ டிக் பெற சந்தா செலுத்தும் திட்டம் நடைமுறையில் உள்ளது. அதன்படி, மாதத்திற்கு 8 அமெரிக்க டாலர்கள், இந்திய ரூபாய் படி மாதத்திற்கு ரூ.650 செலுத்தி மொபைல் பயன்பாட்டிலும், வலைதளமாக இருந்தால், ரூ.900 செலுத்தியும் ப்ளு டிக் பெற்றுக் கொள்ளலாம்.
இந்நிலையில் மாத சந்தா செலுத்தாததால் அரசியல்வாதிகள், சினிமா நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த இந்திய பிரபலங்களின் ட்விட்டர் அக்கவுண்ட்டில் இருந்து ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் பாலிவுட் முதல் கோலிவுட் வரை பல்வேறு திரைப்பிரபலங்களின் ட்விட்டர் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளது. பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான், அக்ஷய்குமார், சல்மான் கான், அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே, ஆலியா பட், மாதுரி தீட்சித், அனுஷ்கா சர்மா, கஜால் ஆகியோரது ட்விட்டர் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளது. கோலிவுட்டை பொறுத்தவரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய், சிலம்பரசன், ஜெயம் ரவி, த்ரிஷா, குஷ்பு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பிரபலங்களின் ட்விட்டர் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி உலக அளவில் புகழ் பெற்ற மற்றும் மில்லியன் கணக்கில் பாலோயர்களைக் கொண்ட ஜஸ்டின் பீபர், ஜே-இசட், பியோனஸ், ஹாரி ஸ்டைல்கள், ராபர்ட் டவுனி ஜூனியர், டெய்லர் ஸ்விஃப்ட், ரிஹானா, கார்டி பி, பிரிட்னி ஸ்பியர்ஸ், ஜே.கே. ரவுலிங் உள்ளிட்டோரது ட்விட்டர் ப்ளூ டிக்கும் நீக்கப்பட்டுள்ளது.