கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாரின் டெல்லி பயணம் ரத்து செய்துள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
கர்நாடகாவில் மே 10-ம் தேதி நடந்த சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் உள்ள 224 இடங்களில் 135 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றி, அமோக வெற்றி பெற்றது. பாஜக 66, மஜத 19, சுயேச்சைகள் 4 இடங்களையும் பிடித்தன. பாஜக தோல்வி அடைந்ததால் முதல்வர் பதவியை பசவராஜ் பொம்மை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், தேர்தலில் வென்ற காங்கிரஸ் முன்னாள் முதல்வர் சித்தராமையா, மாநில தலைவர் டி.கே.சிவகுமார், முன்னாள் துணை முதல்வர் பரமேஷ்வர், முன்னாள் அமைச்சர் எம்.பி.பாட்டீல் ஆகியோர் முதல்வர் பதவியை கைப்பற்றும் முயற்சியில் இறங்கினர். காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை முதல்வராக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.
கர்நாடகாவில் முதல்வர் பதவியை கைப்பற்ற சித்தராமையாவுக்கும், டி.கே.சிவகுமாருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதனிடையே சித்தராமையாவின் மகன் தனது தந்தை தான் அடுத்த கர்நாடகா முதல்வர் எனத் தெரிவித்தது காங்கிரஸில் பரபரப்பை ஏற்படுத்தியது. சிவகுமாரின் ஆதரவாளர்கள் பெங்களூருவில் முக்கிய இடங்களில் ‘அடுத்த முதல்வர் டி.கே.சிவகுமார்’ என நேற்று பேனர் வைத்தனர்.
இந்நிலையில் கர்நாடக மாநில முதலமைச்சராக சித்தராமையா தேர்வு செய்யப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று செய்தியாளர்களைச் சந்தித்த டி.கே. சிவக்குமார், சித்தராமையாவுக்கு வாழ்த்துகள் எனக் கூறியதால் முதலமைச்சராக அவரே தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
நான் போர்க்கொடியும் தூக்கவில்லை. யாரையும் மிரட்டவுமில்லை எனத் தெரிவித்த அவர், முதலமைச்சரை தேர்வு செய்யும் பொறுப்பை கட்சி மேலிடத்திடமே விட்டுவிட்டதாக கூறினார். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் பெரும்பான்மை ஆதரவு சித்தராமையாவுக்கு இருந்தால் அவருக்கு எனது வாழ்த்துகள் எனக்கூறினார்.
ஆனால் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாரின் டெல்லி பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
உடல்நிலை சரியில்லை எனக்கூறி டி.கே.சிவக்குமார் வீடு திரும்பி இருக்கும் நிலையில், கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார் என்பது குறித்த மேலிடத்தின் முடிவு தெரிந்ததால் தான் அவர் அதிருப்தியில் பயணத்தை ரத்து செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.