2000 ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தை நிறுத்துவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதனையடுத்து மே 23ம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் அல்லது வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற அடையாள அட்டை மற்றும் படிவத்தை பூர்த்தி செய்து வங்கிகளில் 10 நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் எனக்கூறப்பட்டது. அது இப்போது தேவையில்லை என்று பாரத ஸ்டேட் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. படிவம் அல்லது அடையாள அட்டை இல்லாமல் 2000 ரூபாய் நோட்டை எஸ்பிஐயின் எந்த கிளையிலும் மாற்றிக்கொள்ளலாம்.
ரூபாய் நோட்டுகளை மாற்றுவது குறித்த வதந்திகள் மற்றும் தவறான தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில் பாரத ஸ்டேட் வங்கியின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. சொந்த பணத்தை எடுக்க, அடையாள அட்டையை கொடுத்து படிவத்தை நிரப்ப வேண்டும் என சமூக வலைதளங்களில் பிரச்சாரம் நடந்து வருகிறது. ரூபாய் நோட்டுகளை மாற்ற ஆதார் தேவையில்லை என்றும், எந்தப் படிவத்தையும் நிரப்ப வேண்டிய அவசியமில்லை என்றும் எஸ்பிஐ தெளிவுபடுத்தியுள்ளது.