இஸ்லாமிய மதத்தை சேர்ந்த அரசு பெண் மருத்துவரை ஹிஜாபை கழற்ற சொல்லி ரகளையில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அரசு மருத்துவரை ஹிஜாபை கழற்ற சொல்லி ரகளையில் ஈடுபட்ட திருப்பூண்டி பகுதியை சேர்ந்த பாஜக நிர்வாகி புவனேஷ்ராம் மீது அரசு மருத்துவரை பணி செய்யவிடாமல் தடுத்தல், மத உணர்ச்சியை தூண்டுவது, பெண் மருத்துவர் மற்றும் செவிலியர்களை அனுமதியில்லாமல் வீடியோ எடுத்தது உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் கீழையூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம், திருப்பூண்டி பகுதியில் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் கடந்த 24 ஆம் தேதி இஸ்லாமிய பெண் மருத்துவர் இரவு பணியில் இருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த பாஜக நிர்வாகி புவனேஷ் ராம் என்பவர், அந்த மருத்துவமனைக்கு வந்துள்ளார். அப்போது அந்தப் பெண் மருத்துவர் தங்கள் மத வழக்கப்படி ஹிஜாப் அணிந்துள்ளார்.
இதனைக் கண்ட புவனேஷ் ராம், “நீங்க டியூட்டில இருக்கீங்க; உங்க யூனிஃபார்ம் | எங்க. நீங்க ஏன் ஹிஜாப் அணிந்து இருக்கீங்க. நீங்க டாக்டர் என்பதே எனக்கு டவுட்டா இருக்கு. எம்.டி. அரவிந்த் டாக்டர் எங்க. இவங்க டாக்டரா? இவங்க டாக்டர் என்பதற்கு என்ன ஆதராம் இருக்கு. ஹிஜாப் அணிந்துகொண்டு கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்காங்க” என மிரட்டல் தொனியில் பேசினார். இதனை அவர் தனது செல்போனிலும் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
பெண் மருத்துவர் ஜன்னத் பாஜக நிர்வாகி மீது வீடியோ ஆதாரத்துடன் கீழையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.