மருத்துவர்கள் பரிந்துரைத்தும் ஜெயலலிதா ஓய்வெடுக்க மறுப்பு தெரிவித்ததாக ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்போலோ மருத்துவர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை பாதிப்பால் 75 நாட்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி காலமானார்.
இவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக மக்கள் பலர் தங்கள் கருத்துகளை கூறியதையடுத்து கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.
அதன்படி, ஜெயலலிதாவின் உறவினர்கள், பாதுகாவலர்கள், மருத்துவர்கள், அரசு உயர் அதிகாரிகள் என இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் ஆறுமுகசாமி ஆணையத்தின் முன் ஆஜராகி விளக்கமளித்தனர்.
இதற்கிடையில், மருத்துவர்களை விசாரிக்கும் போது மருத்துவக் குழு வல்லுநர்கள் முன்னிலையில் விசாரிக்க வேண்டும் என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சார்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக விசாரணை நடைபெற முடியாத சூழல் நிலவியது.
இதனை தொடர்ந்து, விசாரணையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வது தொடர்பாக நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் சசிகலா தரப்பு மற்றும் அப்பல்லோ தரப்பு வழக்கறிஞர்கள் பல்வேறு பரிந்துரைகளை வழங்கினர். முடிவில் அப்பல்லோ மருத்துவர்கள் 11 பேர் விசாரணைக்கு இன்று ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது.
இந்நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திடம் டாக்டர் பாபு மனோகர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதில், 2016-ல் முதலமைச்சராக ஜெயலலிதா பதவி ஏற்கும் நாளுக்கு முன்னதாகவே தலைசுற்றல், மயக்கம் இருந்ததாகவும், சில மருந்துகளை பரிந்துரைத்ததோடு, உடற்பயிற்சிக்கும் பரிந்துரைத்ததாக மருத்துவர் பாபு மனோகர் தெரிவித்துள்ளார்.
மேலும், சிறுதாவூர் அல்லது ஊட்டி சென்று சில நாட்கள் ஓய்வு எடுக்குமாறு பரிந்துரைத்தேன். ஆனால் தினமும் 16 மணிநேரம் வேலை இருப்பதாகக் கூறி ஜெயலலிதா ஓய்வெடுக்க மறுத்தார் என மருத்துவர் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து பேசிய அவர், யார் துணையும் இல்லாமல் நடக்க முடியாத சூழல் ஜெயலலிதாவுக்கு இருந்ததாகவும், மருத்துவர் சிவகுமார் அழைப்பின் பேரில் போயஸ் இல்லத்தில் ஜெயலலிதாவை சந்தித்தேன் என அவர் இந்த விசாரணையில் தெரிவித்துள்ளார்.