சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்று 300 டாலரை எட்டும் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 24 ஆம் தேதி உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தனது கொடூர தாக்குதலை தொடங்கியது. கடந்த 12 நாட்களுக்கு மேலாக தீவிர தாக்குதல்கள் மூலம் உக்ரைனின் முக்கிய நகரங்களை கைப்பற்றியது.
கடந்த 2 நாட்களாக உக்ரைன் மீதான போரை தற்காலிகமாக ரஷ்யா நிறுத்தியுள்ளது. அதன்படி, கீவ் , கார்கிவ், சுமி, மரியபோல், வோல்நோவாக்கா ஆகிய 4 நகரங்களில் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக வெளியேற, மனிதாபிமான அடிப்படையில் தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்ததாக ரஷ்ய தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், உக்ரைன் மீது தீவிர தாக்குதலில் ஈடுபட்டு வரும் ரஷ்யா மீது அமெரிக்க, பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ அமைப்பில் உள்ள பல நாடுகள் பொருளாதார உள்ளிட்ட பல்வேறு தடைகளை விதித்துள்ளது.
உக்ரைன்- ரஷ்யா போர் காரணமாக சர்வதேச பங்குச்சந்தைகளின் வீழ்ச்சி, தங்கம் விலை உயர்வு, கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு விதமான பொருளாதார நெருக்கடிகளை உலக நாடுகள் சந்தித்து வருகிறது.
இந்நிலையில்,ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு மேற்கத்திய நாடுகள் தடை விதித்ததால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரால் ஒன்றுக்கு 300 டாலரை எட்டும் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில். பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயரும் என்றும் எதிர்பார்க்கபடுகிறது.