ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற அடிப்படையில் தேர்தல் ஆணையம் அனைத்துத் தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்துவதற்குத் தயாராக உள்ளதாக இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் சுஷில் சந்திரா தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று(மார்ச்.10) காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், ஓட்டு எண்ணிக்கை என்பது வெளிப்படையான செயல். அரசியல் கட்சிகளின் அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுச்சாவடி முகவர்கள் மட்டுமே ஓட்டு எண்ணும் மையத்திற்குள் வர அனுமதிக்கப்படுவார்கள்.
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்வது என்ற கேள்விக்கே இடமில்லை. ஓட்டுகள் பதிவான எந்த மின்னணு இயந்திரங்களையும் ஸ்ட்ராங் ரூமில் இருந்து எடுக்க முடியாது.தேர்தல் விதிமீறல் தொடர்பாக 5 மாநிலங்களிலும் 2,270 வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன.
தேர்தல் ஆணையத்திற்கு எல்லா அரசியல் கட்சிகளும் ஒன்றுதான். ஒரே நாடு ஒரே தேர்தல் ‘உங்கள் வேட்பாளரை அறிந்து கொள்ளுங்கள்’ என்னும் செயலி, தேர்தல் ஆணையத்தின் வெற்றிகரமான முயற்சியாகும். குற்றப் பின்னணி கொண்டவர்கள், வாக்காளர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. எனவே, நாங்கள் இந்த செயலியை உருவாக்கினோம்.
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது ஒரு நல்ல யோசனையாகும். ஆனால் இதற்கு அரசியலமைப்பில் மாற்றம் கொண்டுவர வேண்டும். தேர்தல் ஆணையம் அனைத்துத் தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்துவதற்குத் தயாராக உள்ளது.5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்த நாங்கள் தயாராக உள்ளோம் என இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் சுஷில் சந்திரா தெரிவித்துள்ளார்.