நரிக்குரவ பெண்ணை கரும்பால் அடித்த போதை ஆசாமி… சம்பவ இடத்தில் சரிந்த சோகம்..!
கடலூர் மாவட்டம் சிதம்பரம் கீரப்பாளையம் ஜே.ஜே. நகரை சேர்ந்தவர் வெள்ளிமலை (65) நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த இவர் ஊர் ஊராக சென்று கோவில் திருவிழாக்களில் கருப்பசாமி வேடமணிந்து யாசகம் எடுத்து பிழைப்பு நடத்தி வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று புதுச்சேரி வீராம்பட்டினம் செங்கழு நீரம்மன் கோவில் தேர் திருவிழாவில் வழக்கம் போல் கருப்பசாமி வேடமடைந்து வெள்ளிமலை யாசகம் எடுத்துக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது குடிபோதையில் வந்த வாலிபர் ஒருவர் அவர் தட்டில் இருந்த பணத்தை எடுக்க முயன்றுள்ளார். அப்போது பணத்தை வெள்ளிமலை தர மறுக்கவே ஆத்திரமடைந்த வாலிபர் அருகில் உள்ள ஜூஸ் கடையில் இருந்த கரும்பை எடுத்து வெள்ளி மலையை சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதில் தலைப்பகுதியில் பலத்த காயமடைந்த வெள்ளிமலை ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்தார். இதனை கண்ட வெள்ளிமலையின் உறவினர்கள் அவரை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வெள்ளிமலை ஏற்கனவே மரணம் அடைந்ததாக தெரிவித்தனர். பின்னர் இச்சம்பவம் தொடர்பாக வெள்ளிமலையின் உறவினர்கள் அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வெள்ளிமலை படுகொலை செய்யப்பட்டது குறித்து விசாரணையை மேற்கொண்டனர்.
மேலும் இந்த கொலை சம்பந்தப்பட்ட வீராம்பட்டினம் பகுதியைச் சேர்ந்த அஜித் என்பவரை கைது செய்த போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று அவரிடம் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.
இதனிடையே நரிக்குறவ இனத்தைச் சேர்ந்த சுமார் 30-க்கும் மேற்பட்டோர் கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும், கொலை செய்த வாலிபரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் ஒன்று திரண்டதால் காவல் நிலையத்தில் பெரும் பரபரப்பு சூழலை ஏற்படுத்தியுள்ளது.
-பவானி கார்த்திக்