நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா சென்ற குடும்பம்… வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சோகம்..!
ஏழு பேர் கொண்ட குடும்பம் ஒன்று மும்பையில் இருந்து 80 கிமீ தொலைவில் உள்ள மலைப்பிரதேசமான லோனாவாளாவுக்கு விடுமுறைக்கு சென்றிருந்தனர்.
இந்தநிலையில், நேற்று பிற்பகல் பூசி அணையின் உப்பங்கழிக்கு அருகிலுள்ள நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா சென்றனர். தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அணை நிரம்பி அருவியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
வலுவான நீரோட்டத்தில் இருந்து தப்பிக்க அருவியில் குளித்துக் கொண்டிருந்த ஏழு பேரும் மெதுவாக கரைக்கு நகர்ந்து வர முயற்சித்தனர். ஆனால் அப்போது திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அவர்கள் நீரில் அடித்து செல்லப்பட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்களும், போலீசாரும் சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
நீர்வீழ்ச்சியின் அடிவாரத்தில் நின்றிருந்த பாசி படிந்த பாறைகளின் மீது குடும்பத்தினர் தவறி விழுந்து, தண்ணீரின் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
மேலும், போதிய பாதுகாப்புப் பணியாளர்கள் இல்லாததால், இடம் தெரியாத சுற்றுலாப் பயணிகள் அடிக்கடி இந்த பகுதியில் விபத்தில் சிக்குவதாக தெரிவித்தனர்.
அவர்களின் தேடும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் மூன்று சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. காணாமல் போன குழந்தைகளை தேடும் பணி இன்றும் தொடர்ந்து வருகிறது.
இதுதொடர்பான பதைபதைக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி காண்போரை சோகத்தில் அழ்த்தி உள்ளது.
-பவானி கார்த்திக்