தனக்கென்று ஒரு அடையாளம்..! “ஆச்சரிய மனிதன் புரூஸ் லீ”
சம காலத்தில் வாழ்கிற திரை பிரபலங்களுக்கு இன்றைய இளைய தலைமுறையினர் ரசிகர்களாக இருப்பது இயல்பான ஒன்று தான் . ஆனால் மறைந்து 50 ஆண்டுகள் கடந்தும், தொடர்ந்து அந்த அந்த காலக்கட்டத்தின் இளைஞர் கூட்டத்தின் ஆதர்ஷ நாயகனாக ஒருவர் அடையாளப்பட்டுக்கொண்டே வருகிற மேஜிக்கையும், இயல்பு என்கிற வரையறைக்குள்ளாகவா வைக்க இயலும்? புரூஸ் லீ வரயறைகளைக் கடந்த ஆச்சரியம்..!
நிழலில் மட்டும் சாகச நாயகன்களாக இருக்கும் பெரும்பான்மைகள் போல அல்லாமல், நிழல்தான் நிஜமும், நிஜத்தைத்தான் நிழலாகவும் காட்டினார் என்கிற இடத்தில்தான், தலைமுறை கடந்தாலும் சிரஞ்சீவித்தன்மை குறையாமல் ”நீ என்ன பெரிய புரூஸ்லியா..?” என்று கேட்கும் அளவிற்கு, வீரம் சார்ந்த இடங்களில் இன்றும் உதாரண மனிதனாக இருந்து கொண்டே இருக்கிறார் புரூஸ் லீ..!
ஒரு சராசரி மனிதனின் வாழ்க்கை முறையில், முட்டி மோதி பட்டுத்தெளிந்து, வாழ்க்கை என்றால் என்ன என்கிற ஆரம்பப் புரிதலை அவன் எட்டுவதற்கே முப்பது வயது ஆகிவிடும். ஆனால், புரூஸ் லீ, அதே முப்பது வயதிற்குள்ளாகவே அடையாளச் சிக்கல் , அவமானம், புறக்கணிப்பு என பல தடைகளைச் சந்தித்து, அவற்றையெல்லாம், தன் விடா முயற்சி, திறமை, உழைப்பால் அடித்து நொறுக்கி, தன்னுடைய பெயரையே இந்த உலகின் தவிர்க்க முடியாத அடையாளங்களில் ஒன்றாக மாற்றிக் காட்டியவர்.
லீ கோய்ன் என்கிற சீன தந்தைக்கும், கிரேஸ் என்கிற ஐரோப்பிய தாய்க்கும் 1940 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 27 ந்தேதி அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரத்தில் பிறந்தவர் புரூஸ் லீ. நடிகரான லீ கோய்ன் , 1940 ஆம் ஆண்டு ஹாங்காங்கில் இருந்து அமேரிக்காவிற்கு மேடை நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவதற்காக, தன் மனைவியுடன் சென்றிருந்த சமயத்தில், அங்கே பிறந்தவர் புரூஸ் லீ என்பதைத் தாண்டி புரூஸ் லீக்கும் அமெரிக்காவிற்கும் வேறு தொடர்புகள் இல்லை.
புரூஸ் லீயின் பள்ளிப் படிப்பு ஹாங்காங்கிலேயே ஆரம்பிக்கிறது. சிறுவனாக இருந்த போதில் இருந்தே படிப்பைவிட அடிதடிகளில் பேரார்வம் கொண்டவராக இருந்த புரூஸ் லீ, பள்ளியில் சக மாணவர்கள் தொடங்கி தன்னுடைய தெரு சிறுவர்கள் வரை அடித்து ஆடியிருக்கிறார். அக்காலகட்டத்தில் ஹாங்காங்கில் மார்ஷல் ஆர்ட்ஸ் மிக பிரபலமாக இருந்ததால், தனக்கு மார்ஷல் ஆர்ட் தெரியும் என்பதைக் காட்டிக் கொள்ளவதே ஒரு ஃபேஷனாக இருந்திருக்கிறது. தெருச் சண்டைகளில் மார்ஷல் ஆர்ட் திறமையக் காட்டுவதெல்லாம் சாதாரண நிகழ்வாக இருந்திருக்கிறது. இந்தப் பின்னணியில் வளர்கிற புரூஸ் லீக்கு அந்தக் கலையின் மீது இயல்பாகவே ஆர்வம் பிறந்திருக்கிறது. தன் மகனின் இந்த ஆர்வத்தைப் புரிந்து கொள்கிற அவரின் தந்தை, புரூஸ் லீயை, அவ்விடத்தில் இருந்த புகழ்பெற்ற பயிற்சியாளர் மார்ஷல் ஆர்ட்ஸ் என்பவரிடம், விங் சுன் (Wing Chun) என்னும் தற்காப்புக் கலையை முறையாகப் பயில சேர்த்து விடுகிறார். அப்போது புருஸ் லீயின் வயது 16. இதற்கு இடையில் பள்ளி படிப்பில் ஆர்வம் காட்டாமல் இருந்த தன் மகனை நடிப்புத் துறையில் ஈடுபடுத்தி, கிட்டத்தட்ட இருபது படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கிற வாய்ப்பும் புரூஸ் லீக்கு கிடைத்திருந்தது. ஒரு பக்கம் சண்டை , மற்றொரு பக்கம் சினிமா என்று வளர்ந்த புரூஸ் லீ , இவை இரண்டையும் ஒரே புள்ளியில் இணைத்து பின்னாளில் கலக்கப் போவதை அப்போது அவர் உணர்ந்திருந்திருப்பாரா என்று தெரியாது.
‘விங் சுன்’ பயிற்சியை முறையாக கற்றுக் கொண்ட புரூஸ் லீ, முன்னைவிட மூர்க்கமாக சண்டைகளில் ஈடுபட, பள்ளியில் அது ஒரு பெரிய பிரச்சனையாக உருவெடுக்கிறது, தெருவிலும் கேங் சேர்த்துக் கொண்டு வீண் அடிதடிகளில் ஈடுபட்டு கெத்து காட்டுவதிலேயே ஆர்வத்தைக் காட்டிய புரூஸ் லீயின் எதிர்காலம் குறித்து கவலை கொள்கிற அவரின் பெற்றோர், புரூஸ் லீயின் குணத்தில் மாற்றம் வர வேண்டுமெனில், இந்தச் சூழலில் இருந்து அவரை வெளியேற்றினால் அன்றி வேறு வழியில்லை என்கிற நெருக்கடியில் புரூஸ் லீயை அமெரிக்காவின் சியாட்டலுக்கு அனுப்பி வைக்கின்றனர்.
1959 ஆம் ஆண்டு தனது பதினெட்டாவது வயதில் சியாட்டிலில் வந்து இறங்கிய புரூஸ் லீ , தனது குடும்ப நண்பர் ஒருவரின் உணவு விடுதியில் தங்கிக் கொண்டு, பள்ளி மேற்படிப்பை முடித்து, பின்னர் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் நாடகத்துறையில் சேர்கிறார். அங்கே சேர்ந்த பின் மெல்ல தத்துவங்கள் சார்ந்த படிப்பின் மீதும் ஆர்வம் பிறக்கிறது அவருக்கு, பிறகு தத்துவம் குறித்தும் படிக்க ஆரம்பிக்கிறார்.
இந்தச் சூழலில் அவரின் செலவுகளை சமாளிக்க போதுமான பணம் இல்லாததால், நண்பர்கள் கொடுக்கும் யோசனையின் பேரில் அவர் கற்றிருந்த மார்ஷியல் ஆர்ட் கலையை பிறருக்கு சொல்லிக் கொடுக்கும் முகமாக, அந்த பதினெட்டாவது வயதிலேயே சியாட்டலில் தனது முதல் பயிற்சிப் பள்ளியைத் தொடங்குகிறார். அதன் தொடர்ச்சியாக வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் வளாகத்திலேயே மார்ஷியல் ஆர்ட்டிற்கு மற்றொரு பயிற்சிக் கூடத்தையும் தொடங்க அவருக்கு வாய்ப்பு அமைகிறது. பிறகு, பல கல்வி நிறுவனங்களுக்கும் சென்று மார்ஷியல் ஆர்ட் குறித்த அறிமுகத்தைக் கொடுக்க இதுவே காரணமாகவும் அமைகிறது. அப்படி ஒரு முறை, கல்விக்கூடம் ஒன்றிற்கு செல்கிற போதுதான் லிண்டாவைச் சந்திக்கிறார். கண்டதும் காதல் கொள்கிறார். பின்னாளில் அவரையே மணந்தும் கொள்கிறார்.
அந்த காலகட்டத்தில் தான் , அமெரிக்காவின் கலிஃபோர்னியா வில், தற்காப்புக் கலைகளைக் கொண்ட போட்டிகள் பிரபலமாக இருந்து வந்ததை அறிந்த புரூஸ் லீ, அங்கு நடக்கும் போட்டிகளில் பங்கு கொள்கிறார். இரண்டே விரல்களை ஊன்றி தண்டால் எடுப்பது, ஒன் இன்ச் பஞ்ச் உள்ளிட்ட தனது பிரத்தியேக திறமைகளைக் காட்டி அங்குள்ளவர்களை ஆச்சரியம் கொள்ள வைக்கிறார். அதன் வழியே இந்த மார்ஷியல் ஆர்ட்ஸ் புழங்குகிற இடங்களில் புரூஸ் லீக்கு ஒரு ரசிகர் வட்டம் உருவாகிறது.
எதிரி ஒருவரை தன்னுடைய முழு பலத்துடன் தாக்க வேண்டும் என்றால் நம்மிடம் முதலில் வேகம் இருக்க வேண்டும். அந்த வேகம் கிடைக்க, ஓரு சில அடிகளேனும் பின்னால் நகர்ந்து முன்னேறி தாக்குதலில் ஈடுபட்டால் மட்டுமே முழு பலம் கிடைக்கும். சில விலங்குகளின் சண்டையில் கூட இந்த பின் நகர்ந்து முன்னேறுதலை நாம் கவனிக்க முடியும். ஆனால், எதிராளியிடமிருந்து ஒரே ஒரு இஞ்ச் இடைவெளியில் நின்று, உடம்பின் எந்த பாகத்தையும் அசைக்காமல், கையை இறுக மூடி விடும் பஞ்சில் எதிராளியை நிலை குலைந்து விழச் செய்யும் புரூஸ் லீயின் அந்த ஒன் இஞ்ச் பஞ்ச்சிற்கு இன்றும் உலகளாவிய ரசிகர்கள் உண்டு. 59 கிலோ எடையில் சராசரி உருவத்தைக் கொண்ட புரூஸ் லீ, தன்னைவிட இரண்டு மடங்கு கூடுதல் எடை உள்ளவர்களையும், இந்த ஒன் இஞ்ச் பஞ்ச் மூலம் நிலைகுலைய வைத்தார் என்பதே இதில் கூடுதல் ஆச்சரியம்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..