வடகிழக்கு பருவமழை தொடங்கிய முதல் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்து வந்தது இந்நிலையில் கடந்த சில வாரங்களாக மழையின் தீவிரம் குறைந்து மழையின் அளவு குறைநதது. மேலும் வடகிழக்கு பருவமழையின் தீவிரம் படிப்படியாக குறையும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் டிசம்பர் 8ம் தேதி முதல் மீண்டும் தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் கனமழை பெய்யும் என்று இந்தியா வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. வங்ககடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதனால் பரவலாக கனமழை பெய்யும் என்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
பின்னர் இன்று இரவு வட மேற்கு திசையில் நகர்ந்து புயலாக மாறும் என்றும், இதன் காரணமாக தென்மேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகள், வட இலங்கை கடலோர பகுதிகளில் பலத்த கனமழை பெய்ய கூடும் என்றும் மணிக்கு 50 கி.மீ. முதல் 90 கி.மீ. சூறாவளி காற்று வீசக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. புயலின் தீவிரம் அதிகமாக இருக்கும் காரணத்தால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும் காரணத்தால் சென்னை, தூத்துக்குடி,கடலூர், எண்ணூர்,நாகப்பட்டினம், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன் உள்ளிட்ட துறைமுகங்களில் எண் 1 புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.