மாடு முட்ட வந்ததால் பயந்து ஓடிய இளம்பெண்.. இறுதியில் இரு சக்கர வாகனம் மீது…!
கோவை போரூர் செட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்த சிவா என்பவரின் மகள் ஜனனி (18). இவர் கோவைப்புதூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரி ஒன்றில் பி.காம் 2ம் ஆண்டு படித்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று வழக்கம் போல் கல்லூரிக்கு சென்ற அவர், கல்லூரி முடிந்து வீடு திரும்புவதற்காக கோவைப்புதூர் பேருந்து நிறுத்தத்திற்கு வந்தார்.
அப்போது சாலையில் சுற்றித்திருந்த மாடு ஒன்று ஜனனியை முட்டுவது போல வந்துள்ளது. இதனை கண்டு பயந்துபோன ஜனனி அங்கிருந்து தப்பி ஓட முயன்றார்.
அப்போது எதிர்புறமாக வந்த இரு சக்கர வாகனம் மீது மோதி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக ஜனனியை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு ஜனனியை பரிசோதித்த மருத்துவர்கள் ஜனனி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கோவைப்புதூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவம் இடத்திற்கு வந்த போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-பவானி கார்த்திக்