சனாதன தர்மம் ஒழிப்பு..! உதயநிதி ஸ்டாலின் வழக்கிற்கு பெங்களூர் நீதிமன்றம் தீர்ப்பு..!
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பாக சனாதன தர்மம் ஒழிப்பு மாநாடு சென்னையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என கூறினார். ஆனால் சனாதன தர்மத்தைப் பின்பற்றுவோரை இனப்படுகொலை செய்ய வேண்டும் என அவர் பேசியதாக “பாஜக ஒரு பொய்யான தகவலை இணையத்தில் பரப்பி பெரும் சர்ச்சையை கிளப்பியது..
உதயநிதியின் இந்த சனாதன தர்மம் ஒழிப்பு பேச்சுக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து பாஜக சார்பில் அவர்மீது வழக்குகள் தொடரப்பட்டது . உச்சநீதிமன்றத்திலும் அதன் மீதான வழக்குகள் நிலுவையில் இருந்தது. கர்நாடகா மாநிலம் பெங்களூர் நீதிமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு எதிராக சமூக ஆர்வலர் பரமேஸ் பொதுநலன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் உதயநிதி ஸ்டாலினை ஜூன் 25-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டுமென பெங்களூர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதனையடுத்து இன்று பெங்களூர் 42-வது கூடுதல் தலைமை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ் திரேட் முன்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆஜரானார். இன்றைய விசாரணையின் போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பெங்களூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி தீர்ப்பு வழங்கியது. மேலும் இந்த வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 8-ந் தேதிக்கு ஒத்திவைத்தது.
சென்னை மாநாட்டில் உதயநிதி பேசியது :
“சனாதன ஒழிப்பு மாநாடு” என்று நீங்கள் போட்டிருக்கிறீர்கள். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித் தான் இந்த “சனாதனம்”. சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம். என இவ்வாறே சென்னை மாநாட்டில் சனாதன தர்மம் ஒழிப்பு குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசி இருந்தார்.
சனாதனம் என்கிற சொல் சமஸ்கிருதத்தில் இருந்து வந்தது. சனாதனம் சமத்துவத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரானது. சனாதனம் என்பது நிலையானது, அதாவது மாற்ற முடியாதது. யாரும் கேள்வி கேட்க முடியாது என்பது தான் சனாதனத்திற்குரிய அர்த்தம். எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். எதுவுமே நிலையானது கிடையாது. எல்லாவற்றுக்கும் நாம் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்காக உருவான இயக்கம் தான் இந்த கம்யூனிஸ்ட் இயக்கமும், திராவிட முன்னேற்ற கழகமும். எனவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்தார்.
– லோகேஸ்வரி.வெ