தலைமறைவாகிய ஆற்காடு சுரேஷின் மனைவி கைது.. நிதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு..!
தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் ஜூலை 5-ஆம் தேதி வீட்டருகே கட்டுமான பணிகளை கவனித்துக் கொண்டிருந்த நிலையில் 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த கொலையில் தொடர்புடைய 24 பேரை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் திருவேங்கடம் என்ற ரவுடி மட்டும் போலீஸாரால் என்கவுன்டர் செய்யப்பட்டார் மேலும், கைது செய்யப்பட்ட நபர்களை மாறி மாறி காவலில் எடுத்து போலீசார் திவீர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும், ஆற்காடு சுரேஷின் மனைவிக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகித்த போலீசார், ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடியை தேடி வந்தனர்.
போலீசார் தேடுவதை அறிந்து கொண்ட பொற்கொடி தலைமறைவாகியுள்ள நிலையில் அவர் ஆந்திராவில் இருப்பதை அறிந்த தனிப்படை போலீசார், அங்கு சென்று நேற்று பொற்கொடியை பிடித்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும், ஆற்காடு மனைவி பொற்கொடிக்கும் தொடர்பிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து, அவரை கைது செய்த தனிப்படை போலீசார், எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பொற்கொடியை செப்டம்பர் 2ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
-பவானி கார்த்திக்