சர்தார் படப்பிடிப்பில் உயிரிழந்த ஸ்டண்ட் மாஸ்டர் ஏழுமலையின் உடலுக்கு நடிகர் கார்த்தி அஞ்சலி..!
நடிகர் கார்த்தி நடிக்கும் சர்தார்-2 பட ஷூட்டிங்கின் போது சண்டை பயிற்சியாளர் ஏழுமலை வயது 59 தவறி விழுந்து உயிரிழந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டு, கார்த்தி நடிப்பில் வெளியான படம் சர்தார். இப்படத்தை, பி.எஸ்.மித்ரன் இயக்கினார். இந்த படம் வரவேற்பை பெற்றதை அடுத்து, அதன் இரண்டாம் பாகம் எடுக்க படக்குழு திட்டமிட்டது. இதையடுத்து, ‘பிரின்ஸ் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் சர்தார் – 2 படத்தின் பூஜை, கடந்த 12ம் தேதி நடந்தது. தொடர்ந்து 15ம் தேதி முதல் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
நேற்று முன்தினம் (ஜூலை16) இரவு, வடபழனியில் உள்ள ஸ்டூடியோவில், சண்டை காட்சிகள் படம் பிடிக்கப்பட்டன. இதில், புதுவண்ணாரப்பேட்டை, பூண்டி தங்கம்மாள் தெருவைச் சேர்ந்த ஏழுமலை, 59, சண்டை பயிற்சியாளராக பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக, 20 அடி உயரத்தில் இருந்து ஏழுமலை கீழே தவறி விழுந்தார். இதில், மார்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு வடபழனியில் உள்ள சூர்யா மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இன்று அதிகாலை உயிரிழந்தார். நுரையீரலில் ரத்தக்கசிவு ஏற்பட்டதால் ஏழுமலை உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். படப்பிடிப்பின்போது, பாதுகாப்பு உபகரணங்கள் ஏதும் அணியாததே விபத்திற்கான காரணம் எனக் கூறப்படுகிறது. இது குறித்து விருகம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.
இந்நிலையில் திருவொற்றியூரில் தற்காலிகமாக வசிக்கும் ஏழுமலையின் வீட்டுக்கு நேற்று இரவு சர்தார் படத்தில் நடிக்கும் நடிகர் கார்த்திக் ஏழுமலையின் உடலுக்கு மலர் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து இன்று ஸ்டண்ட் குழுவினருடன் காசிமேடு பகுதியில் உள்ள அவரது வீட்டின் அருகே அவரது உடல் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டு பின்னர் அவரது உடல் திருவொற்றியூரில் இருந்து காசிமேடு மயானத்துக்கு எடுத்து வரும்போது நூற்றுக்கும் மேற்பட்ட ஸ்டண்ட் கலைஞர்கள் கலந்து கொண்டு குட்டிக்கரணம் அடித்து அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினார். காசிமேடு மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..