புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை சந்தித்து நடிகர் சிவகார்த்திகேயன் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.
தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நடிகை மரியா கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் சத்யராஜ், பிரேம்ஜி, ராஷி கண்ணா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் சுரேஷ் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. மேலும், இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். கடந்த மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி காரைக்குடி பகுதியில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது. ஆகையால், நேற்று(மார்ச்.25) படப்பிடிப்பு நடுவே புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை நடிகர் சிவகார்த்திகேயன் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசியுள்ளார். அப்போது அவர்,படப்பிடிப்பு கட்டணங்களை குறைக்கும்படி சிவகார்த்திகேயன் கேட்டுக்கொண்டார். அதற்கு விரைவாக நடவடிக்கை எடுப்பதாக முதலமைச்சர் ரங்கசாமி உறுதியளித்தார்.
முன்னதாக, ‘காத்துவாக்கு ரெண்டு காதல்’ படப்பிடிப்பின்போது இதே கோரிக்கையை விஜய் சேதுபதியும் வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.