கட்சியின் அடிப்படைத் தன்மையே தெரியாதவர் அண்ணாமலை, அவரைப் பற்றி கேள்வி கேட்டால் நான் பதில் சொல்ல மாட்டேன் , முதிர்ந்த அரசியல்வாதியைப் பற்றி கேளுங்கள் சொல்கிறேன் என எடப்பாடி பழனிச்சாமி எரிச்சலுடன் பதிலளித்தார்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் இன்று மாலை உறுப்பினர் சேர்க்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுகவின் பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினார்.
பின்னர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அண்ணாமலை வெளியிட்ட ஊழல் பட்டியல் குறித்த கேள்விக்கு… பாஜக தலைவர் அண்ணாமலை ஊழல் பட்டியல் வெளியிட்டாரா? என்பது தெரியவில்லை. பத்திரிக்கைகளில் சொத்துப்பட்டியல் வெளியிட்டது குறித்து பார்த்தேன். அவர் ஊழல் வெளியிடட்டும் பார்க்கலாம் என்றார்.
கர்நாடக தேர்தல் குறித்து நாளை நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி போட்டியிடுவது குறித்து நாளை முடிவெடுக்கபடும் என்றார்.
அண்ணாமலை தொடர்ந்து அதிமுகவை விமர்சித்து வருகிறாரே….என்ற கேள்விக்கு அவரைப் பற்றி பேச வேண்டாம், அண்ணாமலை பேசிப் பேசியே பெரிய ஆளாக நினைக்கிறார். நான் 50 வருடமாக அரசியலில் இருக்கிறேன். எனவே கட்சியில் என்ன நடக்கிறது ஏது நடக்கிறது என்பது எனக்கு தெரியும். ஆனால் அவர் பேட்டி கொடுத்தே பெரியார் ஆக வேண்டும் என நினைக்கிறார். தயவுசெய்து அவரைப் பற்றி என்னிடம் கேட்காதீர்கள்.
மீண்டும் ஒருமுறை கேட்கிறேன், அவரைப் பற்றிய கேள்வியை என்னிடம் கேட்காதீர்கள் , வேறு எந்த கட்சியை பற்றி வேண்டுமானாலும் கேளுங்கள் . ஏனென்றால் அவர்களுக்கு அடிப்படை தன்மை தெரிய வேண்டும் .கட்சியில் இருப்பவருக்கு அடிப்படை தன்மை தெரியவேண்டும். அப்படிப்பட்டவர்களை பற்றி கேட்டால் நான் பேசுவேன். தன்னை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதற்காக பேசுகிறார். முதிர்ந்த அரசியல்வாதி பற்றி கேளுங்கள் பதில் சொல்லுகிறேன். என்னிடம் அண்ணாமலையை பற்றி கேட்க வேண்டாம் என்று எரிச்சலுடன் பதிலளித்தார்.