பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறுவதாக அதிமுக தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
அதிமுக – பாஜக தலைவர் அண்ணாமலை இடையே அடிக்கடி மோதல் போக்கு ஏற்பட்ட வண்ணம் இருந்தது. அந்த வகையில், ஜெயலலிதா மற்றும் பேரறிஞர் அண்ணாவை தரக்குறைவாக பேசி சர்ச்சையில் சிக்கினார். இதற்கு அதிமுகவின்ர் கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 18ஆம்அதிமுக இனி பாஜகவுடன் கூட்டணி்யில் இல்லை என அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் தெரிவித்தார்.
இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் தலைமைக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:
தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள, பாஜகவின் மாநிலத் தலைமை, கடந்த ஒரு வருட காலமாக திட்டமிட்டே, வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு அதிமுக மீதும், எங்களுடைய கட்சியின் தெய்வங்களான பேரறிஞர் அண்ணா, மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியும், எங்கள் கொள்கைகளை விமர்சித்தும் வருகிறது.
மேலும், பாஜகவின் மாநிலத் தலைமை கடந்த 20.08.2023 அன்று மதுரையில் நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க அதிமுக வீரவரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டை சிறுமைப்படுத்தியும், இரண்டு கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களை வழிநடத்தும் எங்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பற்றி அவதூறாக விமர்சித்தும் வருகிறது. இந்தச் செயல் கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தலைமைக் கழகத்தின் எம்ஜிஆர் மாளிகையில் இன்று பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், இரண்டு கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களின் எண்ணத்துக்கும், விருப்பத்துக்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, அதிமுக இன்று முதல் பாஜகவிலிருந்தும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் விலகிக் கொள்கிறது என்ற ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது, என்று குறிப்பிட்டுள்ளது.