மதுரையில் ஆண்டு தோறும் நடக்கும் சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் மாதம் 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. மே 8 வரை 16 நாட்கள் நடக்கும் திருவிழாவையொட்டி மீனாட்சியம்மன் கோவில், கள்ளழகர் கோவில், தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் ஆன்மிக நிகழ்வுகள் நடைபெறும். சித்திரை திருவிழா நாட்களில் மீனாட்சி அம்மனும் சுந்தரேஸ்வரரும் பல்வேறு வாகனங்களில் நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
மீனாட்சி திருக்கல்யாணம்:
ஏப்ரல் 30ம் தேதி மீனாட்சி பட்டாபிஷேகத்தை தொடர்ந்து, மே 1ம் தேதி மீனாட்சி விஜயம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து மே 2ல் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெற்றது. மே 3ம் தேதி மதுரையே குலுக்கும் விதமாக மீனாட்சி, சுந்தரேஸ்வரர் தேரோட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற லட்சக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
வைகை ஆற்றில் இறங்குதல்:
மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய அம்சமான வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக நேற்று கள்ளகழகர் கோயிலில் இருந்து கள்ளழகர் தங்க குதிரையில் புறப்பட்டார். கள்ளழகருக்கு மூன்று மாவடியில் எதிர் சேவை நடந்தது. ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை அழகர் அணிந்து கொண்டார்.
கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுவதற்கு முன்பாக ஆற்றின் மையப் பகுதியில் அமைந்த மண்டபத்தில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதையடுத்து விழாவின் மிக முக்கிய நிகழ்வாக கள்ளழகர் இன்று மே 5ம் தேதி காலை 6 மணியளவில் தங்கக் குதிரை வாகனத்தில் வலம் வந்து வைகை ஆற்றில் எழுந்தருளினார்.
விண்ணை முட்டிய முழக்கம்:
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தை காணா லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர். கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளிய போது ‛கோவிந்தா கோவிந்தா’ என பக்தி பரவசத்துடன் முழக்கமிட்டனர். பக்தர்களின் முழக்க சத்தம் விண்ணை பிளக்கும் அளவிற்கு ஆராவாரமாக அமைந்தது.