நாடாளுமன்றத்தில் விளையாட்டு மேம்பாட்டு நிதி குறித்தான கேள்விக்கு அத்துறையின் ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் அளித்துள்ள பதிலில் தென்னிந்தியா மாநிலங்களுக்கு பாரபட்சம் காட்டிருப்பது அம்பலமாகியுள்ளது.
நாடாளுமன்றதில் ஆம் ஆத்மீ கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சுஜித் குமார் குப்தா விளையாட்டு துறையை மேம்படுத்துவதற்காக ஒன்றிய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும் அதற்கான மாநில வாரியான நிதி ஒதுக்கீடுகள் குறித்தும் கேள்வி எழுப்பினார். இந்த கேள்விக்கு ஒன்றிய அரசின் விளையாட்டு துறை அமைச்சர் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார். அதில், மாநில வாரியாக கடந்த மூன்று ஆண்டுகளில் அதிகபட்சமாக குஜராத் மாநிலத்திற்கு மட்டும் 285 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அளவிற்கு வேறு எந்த மாநிலத்திற்கும் நிதி ஒதுக்கப்படவில்லை. இதற்கு அடுத்தபடியாக உத்திரபிரதேச மாநிலத்திற்கு ரூ.46 கோடியும், பஞ்சாப்புக்கு ரூ.45 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தென் இந்திய மாநிலங்களுக்கு சொற்ப அளவிலேயே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிற்கு 4.32 கோடி மட்டுமே விளையாட்டு மேம்பாட்டுக்காக ஒன்றிய அரசு ஒதுக்கியுள்ளது. மேலும் ஆந்திரா மாநிலத்திற்கு 5 கோடி நிதியும் மற்றும் தெலுங்கானா மாநிலத்திற்கு 7 கோடி நிதி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் பாஜக ஆளும் மாநிலமான கர்நாடகாவிற்கு 41 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் புதுச்சேரிக்கு நாட்டிலேயே மிக குறைந்த அளவாக 89 லட்சம் ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள இந்த புள்ளிவிவர பட்டியலில் பாஜக ஆளாத தென்னிந்தியா மாநிலங்களுக்கு பாரபட்சமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.