இன்ஸ்டாவில் அறிமுகமான செயலி.. பணத்தை முதலீடு செய்து ஏமாறிய நபர்..
கோவை மாவட்டத்தை சேர்ந்த ராமசாமி என்பவர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பங்கு சந்தை தொடர்பான பதிவு ஒன்றை பார்த்துள்ளார். இதையடுத்து, அந்த பதிவில் இருந்த வாட்ஸ் அப் குழுவில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். அந்த வாட்ஸ் அப் குழுவில், பெயின் என்ற ஸ்டாக் டிரேடிங் சம்பந்தமான செயலியை பதிவிறக்கம் செய்யும்படி, கோரப்பட்டுள்ளது.
அதனைதொடர்ந்து, அந்த செயலியை பதிவிறக்கம் செய்த ராமசாமி, தனது வங்கிக் கணக்குகள், செல்போன் எண் ஆகியவற்றை உள்ளிட்டுள்ளார். மேலும், 9 லட்சம் ரூபாய்க்கு மேல், அந்த செயலியில் முதலீடு செய்துள்ளார். முதலீடு செய்த பிறகு, 32 லட்சம் ரூபாய் உங்களுக்கு கிடைத்துள்ளது என்று, செயலியில் கூறப்பட்டுள்ளது.
இதனால், ஆனந்தம் அடைந்த ராமசாமி, அந்த பணத்தை எடுக்க முயன்றுள்ளார். ஆனால், வங்கியில் கணக்கில் பணம் இல்லாததால், இது ஒரு சதி என்பதையும், தான் ஏமாற்றப்பட்டதையும் அவர் அறிந்துள்ளார். இதுதொடர்பாக காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், ராஜஸ்தானை சேர்ந்த கும்பல் ஒன்று தான், இந்த செயலை செய்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, அப்பகுதி உள்ளூர் காவல்துறையினரின் உதவியை நாடிய கோவை காவல்துறையினர், அந்த வடமாநில கும்பலை சேர்ந்த 4 பேரை கைது செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
-பவானி கார்த்திக்