ஆந்திராவில் பழைய வீட்டை இடித்து கடைக்கால் போடுவதற்காக பள்ளம் தோண்டியபோது கிடைத்த இரும்பு பீரோ பூமியில் கிடைத்ததால் அது அரசுக்கு சொந்தம் என வருவாய் துறை அதிகாரிகளும் தங்கள் நிலத்தில் கிடைத்ததால் அது தங்களுக்கே சொந்தம் என வீட்டின் உரிமையாளரும் போட்டி போட்ட நிலையில், இறுதியில் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் தேவனகொண்டா மண்டலம், கரிவேமுலா கிராமத்தில் கிருஷ்ணா ரெட்டி என்பவருக்கு சொந்தமான வீட்டை சாகலி நரசிம்மலு என்பவருக்கு ஓராண்டுக்கு முன்பு 9 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்தார். இந்த வீட்டை இடித்துவிட்டு புதியதாக வீடு கட்ட நரசிம்மலு கடைக்கால் தோண்டி கொண்டுருந்தபோது ஒரு இரும்பு லாக்கர் பீரோ கிடைத்தது.
அதிக எடை கொண்ட பீரோவில் முன்புற கதவில் லட்சுமி படமும் இருந்ததால் இதில் விலைமதிப்பு மிக்க நகைகள் இருக்கலாம் என கிராம முழுவதும் தகவல் தீயாக பரவியது. இந்நிலையில் தங்கள் வீட்டில் கிடைத்த பீரோ தங்கள் முன்னோர்களுடயது எனவே அது தங்களுக்கே சொந்தம் என கிருஷ்ணா ரெட்டியும், பூமியில் கிடைத்த பொருட்கள் அரசுக்கே சொந்தம் என வருவாய் துறைதுறை அதிகாரிகளும், நாங்கள் வாங்கிய நிலத்தில் கிடைத்ததால் அது தங்களுக்கே சொந்தம் என நரசிம்மலு கூறி வந்தனர்.
இந்நிலையில் இந்த பீரோவை அனைவரது மத்தியில் திறக்கப்படும் அதுவரை யாரும் திறக்க அனுமதி இல்லை என போலீசார் மற்றும் அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்தனர். இந்நிலையில் இன்று பொது மக்கள் மத்தியில் அனைவரும் ஒன்றாக இருக்கும் போது பீரோவில் என்ன உள்ளது என கேஸ் கட்டர் கொண்டு வந்து திறக்கப்பட்டது.
இதனை காண அதனை சுற்றியுள்ள பல கிராம மக்களுக்கு தகவல் பரவியதால் பல ஆயிரக்கணக்கானோர் அதனை காண திரண்டனர். இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்பிற்கு மத்தியில் திறக்கப்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் போராடி அந்த பீரோவை திறந்த போது அதில் பழைய பேப்பர்கள் மற்றும் 1 அன நாணயம் இருந்தது இதனால் அனைவரும் ஏமாற்றம் அடைந்தனர்.