அரவிந்சாமி 54…! சாக்லேட் பாய் டூ ரக்கட் பாய்..!
அரவிந்தசாமி:
எண்பதுகளில் பிறந்த பெண்களிடம் உங்களது லவ்வர் பாய் அல்லது ஹீரோ யார் என்று கேட்டால் அவர்களில் பெரும்பாலானோர் சொல்லும் பதில் கமல்ஹாசனுக்கு அடுத்து அரவிந்த்சாமி என்ற பெயராகத்தான்.
ஒரு நடிகராக ஸ்டார் அந்தஸ்து வந்த பின்னர் அதனை தனது தலையில் ஏற்றிக் கொள்ளாமல் எப்போதும் இயல்பாகவும் சக நடிகர்களை மரியாதையாகவும் நடத்தக்கூடிய நடிகராகவே இருந்து வருகிறார் அரவிந்த்சாமி.
சென்னை லயோலா கல்லூரியில் தனது இளங்கலை படிப்பை படித்துக் கொண்டிருந்த போதே மாடலிங்கில் கவனம் செலுத்தினார். அதன் மூலம் கிடைத்த வாய்ப்பால் மணிரத்தினம் அறிமுகம் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்தார்.
தனது அப்பா வீ.டி. சாமி மிகப் பெரிய தொழிலதிபராக இருந்தாலும் தனது கல்லூரி காலங்களில் தனக்கான செலவினை தானே பார்த்துக் கொள்ள மாடலிங்கில் ஈடுபட்டு வந்துள்ளார் அரவிந்த்சாமி.
ரோஜா படத்தின் ஹிட்டுக்கு பின்னர் தமிழ் மட்டும் இல்லாமல் மலையாளம் தெலுங்கு என தென்னிந்திய சினிமாவில் ஒரு கலக்கு கலக்கி வந்த அரவிந்த்சாமி. ஹிந்தியிலும் கால் பதிக்க தொடங்கினார்.
விபத்து :
அதன் பின்னர் தானே லேண்ட் மக்ஸ்மஸ் என்ற கன்சல்டன்சி நிறுவனத்தை உருவாக்கி அதில் 5000 பேருக்கு மேல் வேலை பார்க்கும் அளவிற்கு விரிவு படுத்தினார்.
தொழிலில் கொடிகட்டி பறந்து வந்து கொண்டிருந்த வேலையில் ஏற்பட்ட ஒரு விபத்தினால் அரவிந்த்சாமியின் முதுகுத்தண்டில் காயம் ஏற்பட்டது. இதனால் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் படுத்த படுக்கையாகவே இருந்தார்.
இப்படி முடங்கிக் கிடந்த அரவிந்த் சாமியை மீண்டும் சினிமா பக்கம் கூட்டி வந்தவரும் மணிரத்தினம் தான். அதாவது மணிரத்தினத்தின் இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான கடல் படத்தில் மீண்டும் நடிக்க துவங்கினார்.
இதையடுத்து 2015 ஆம் ஆண்டு வெளியான தனி ஒருவன் படத்தில் ஒரு பக்காவான வில்லனாக நடித்து அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார். இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்க இருப்பதாக தகவல்கள் வெளியானதால் அதில் அரவிந்த் சாமி இருப்பாரா மாட்டாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இப்போதும் உள்ளது.
இதைத்தொடர்ந்து இவர் பல தமிழ் படங்களிலும் மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.
இப்படி, தான் சினிமாவில் அறிமுகமான காலகட்டத்திலிருந்து தற்போது வரை இளசுகளின் மனம் கவர்ந்த நாயகனாக வலம் வந்து கொண்டிருந்த அரவிந்த்சாமிக்கு இன்று அதாவது ஜூன் 18ஆம் தேதி 54ஆவது பிறந்தநாள்.
எனவே இன்று தனது 54ஆவது பிறந்த நாளை கொண்டாடி வரும் அரவிந்த் சாமிக்கு திரை பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
-பவானி கார்த்திக்