ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பம்.. குற்றவாளிகளை கைது செய்யகோரி மாயிலாடுதுறையில் சாலை மறியல்..!
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரான ஆம்ஸ்ட்ராங் சென்னையில் அவரது வீட்டின் அருகில் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார்.
கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இதனிடையே குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி மயிலாடுதுறை அருகே சேந்தங்குடி பகுதியில் நீல புலிகள் இயக்கத்தின் மாவட்ட தலைவர் கபிலன் தலைமையில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் ஏராளமானோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் மயிலாடுதுறையில் இருந்து சிதம்பரம் செல்லக்கூடிய பிரதான சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
தகவல் அறிந்து வந்த மயிலாடுதுறை போலீசார் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து போராட்டத்தை இளைஞர்கள் கைவிட மறுத்த நிலையில் ஒரு சிலரை காவல்துறையினர் கடுமையாக தாக்கி கைது செய்ய அழைத்துச் சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அங்கு திரண்டு இருந்த பெண்கள் காவல்துறையினரை தடுத்து நிறுத்திய நிலையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் கைது செய்வதற்காக அழைத்துச் சென்ற இளைஞர்களை விடுவித்த நிலையில் போராட்டக்காரர்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்ட நிலையில் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
-பவானி கார்த்திக்