”பள்ளி திறந்த முதல் நாளே மாணவிக்கு நடந்த கொடுமை”.. டி.சி வாங்கிய பெற்றோர்..!
மயிலாடுதுறை மாவட்டம் சின்னநாகங்குடியை சேர்ந்தவர்கள் செல்வராஜ்-ஜெயந்தி தம்பதியினர். இவர்களது இரண்டாவது மகள் மயிலாடுதுறை செயின்ட் பால்ஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் பெற்றோர்கள் நேற்று சேர்த்துள்ளனர்.
நேற்று முதல் நாளாக மாணவி பள்ளிக்கு சென்றுள்ளார். பள்ளி முடிவடைந்து வீட்டிற்கு செல்லும் போது ஆசிரியை ஒருவர் வகுப்பறையை கூட்ட சொல்லியபோது, வேன் நிற்பதாகவும் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று மாணவி கூறியதால் ஆசிரியர் அடித்து விட்டதாக வீட்டுக்கு சென்ற மாணவி பெற்றோரிடம் கூறியுள்ளார்.
அதனை தொடர்ந்து இன்று மாணவியை அழைத்துக்கொண்டு பள்ளிக்கு வந்த பெற்றோர்கள் படிக்க வந்த தங்கள் மகளை எப்படி கூட்ட சொன்னீர்கள் என்று பள்ளி நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் மாணவியை வேறு பள்ளியில் சேர்த்துக் கொள்வதாக கூறி மாணவியின் டிசியை பெற்று சென்றனர். ஒழுக்கம் என்ற பெயரில் பள்ளி நிர்வாகத்தினர் மாணவிகளை கொடுமைப்படுத்தி வருவதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது குறித்து பள்ளி நிர்வாகத்தினர் கூறுகையில் நேற்று பள்ளியில் மதியம் 3.30 மணியிலிருந்து ஆசிரியர்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றதாகவும் வகுப்பறைக்கு ஆசிரியர்கள் ஒருவரும் செல்லவில்லை என்றும், மாணவியை யாரும் அடிக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
பள்ளியில் உள்ள வகுப்பறைகளை ஒவ்வொரு நாளும் ஒரு பெஞ்சில் அமர்ந்திருக்கும் மாணவிகள் சுத்தம் செய்வது வழக்கம் என்றும் தெரிவித்தனர். பள்ளிகள் திறந்த முதல் நாளே நடந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-பவானி கார்த்திக்