சேலம் மாவட்டம் ஆத்தூரில் நீட் தேர்வுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்ட மாணவனுக்கு நீதி வேண்டும் என்றும் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை ஆளுநர் அங்கீகரிக்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நீட் தேர்வு பயத்தால் சேலம் மாவட்டம் ஆத்தூரில் தனியார் பள்ளி ஒன்றில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த மாணவன் சந்துரு இன்று காலை திடீரென விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நீட் தேர்வுக்கு பயந்து மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும் , மாணவன் சந்துரு- வின் இறப்பிற்கு நீதி கேட்டும், தமிழக சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு தமிழக ஆளுநர் அங்கீகாரம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தியும் இன்று மாலை சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்திய மாணவர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த மாணவன் சந்துரு நீட் தேர்வு பயத்தால் ஆத்தூர் பகுதியில் உள்ள சரஸ்வதி பள்ளியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவனின் தற்கொலைக்கு காரணமான நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்,
தமிழகத்தில் அனிதா முதல் சந்துரு வரை நீட் தேர்வு பயத்தால் எண்ணற்ற மாணவ மாணவிகள் தற்கொலை செய்து கொண்டு உள்ளனர். ஒன்றிய மோடி அரசாங்கம் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், தமிழக சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தமிழக ஆளுநர் அங்கீகரிக்க வேண்டும் எனவும், மாணவர் நலனில் அக்கறை இல்லாத ஆளுநர் ரவி பதவி விலக வேண்டும். மரணம் அடைந்த மாணவனுக்கு நீதி கிடைக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் கோசங்கள் எழுப்பினர்.
மேலும் தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யும் வரை தொடர்ச்சியான போராட்டங்கள் நடத்தப்படும் எனவும் தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் எஸ். பவித்ரன், மாவட்ட தலைவர் அருண்குமார், உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.