மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி..!!
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 5 நாட்களுக்கு பின் இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி எண் 110-ன்கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.. ஒன்றிய அரசின் வழிகாட்டுதல்படி மாநில அரசின் தீவிர மக்கள்தொகை கட்டுப்பாடு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மூலம் பிறப்பு விழுக்காடு கட்டுப்படுத்தப்பட்டு சீரமைக்கப்பட்ட நிலையில், அதனை தண்டிக்கும்விதமாக 2026-ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்த கருதியிருக்கக்கூடிய நாடாளுமன்றத் தொகுதிகள் மறுவரையறையினால் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் வெகுவாக குறைக்கப்படக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு கூட்டாட்சிக் கருத்தியலுக்கு எதிராக ஒன்றிய அரசு நடந்துகொள்ளும் போதெல்லாம் அதற்கு எதிராக தமிழ்நாடு தொடர்ந்து எதிர்வினை ஆற்றி வருகிறது. இந்தப் பிரச்சினைகள் குறித்து எல்லாம் மக்கள் மன்றத்தில் விரிவாக எடுத்துக் கூறி, தேவைப்பட்டால் சட்டமன்றத்தில் அதற்குரிய தீர்வை எட்டுவதற்கு உரிய சட்டங்களை இயற்றிடவும் நாம் என்றும் தயங்கியதே இல்லை.
இன்னும் குறிப்பாக சொல்லப்போனால் நாம் இயற்றிய சட்டமுன்வடிவுகள் மீது உரிய ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்திய தமிழ்நாடு ஆளுநர் அவர்களுடைய செயலை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை சென்று வழக்கு தொடுத்து, சமீபத்தில் தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் உரிமைகளை காக்கும் வகையில் கூட்டாட்சிக் கருத்தியலின் மகத்துவத்தை நாடெங்கும் பரப்பிடும் வகையில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை நாம் பெற்றிருக்கிறோம்
நாட்டின் இறையாண்மை மற்றும் ஒற்றுமையைப் பேணிப் பாதுகாப்பது ஒன்றிய அரசினுடைய முதற்கடமை அந்த உயரிய நோக்கத்தினை செம்மையாக செயல்படுத்திட அனைத்து மாநிலங்களும் தங்களுடைய முழுமையான ஒத்துழைப்பினை நல்கிட வேண்டும்.
அதேவேளையில், மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவதில் மாநிலங்களின் பங்கு முதன்மையானது. அதற்கு ஒன்றிய அரசு உரிய ஆதரவை வழங்க வேண்டும் என்பதுதான் இதன் அடிப்படை கருத்து.
இந்திய திருநாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் மிகப்பெரும் பொறுப்பை மாநிலங்கள் ஏற்றுக் கொண்டுள்ளன. கல்வி, சுகாதாரம், ஊரக வளர்ச்சி, நகர்ப்புற மேம்பாடு என அனைத்தையும் மாநிலங்கள் முன்னெடுத்துச் செல்கின்றன. ஆனால் அவற்றையெல்லாம் நிறைவேற்றிடத் தேவையான அதிகாரங்கள் மாநிலங்களிடம் இருந்து பறிக்கப்பட்டு ஒன்றிய அரசிடம் குவிக்கப்பட்டு வருகின்றன.
தொடர்ந்து மாநிலங்களின் உரிமை பறிக்கப்பட்டு வரும் இந்த இக்கட்டான சூழலில், கூட்டாட்சிக் கருத்தியலை வலியுறுத்தும் வகையிலும், ஒன்றிய-மாநில அரசுகளின் உறவுகளை, அதற்குரிய கொள்கைகளை மேம்படுத்திடவும், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் விதிக்கூறுகள், நடைமுறையிலுள்ள சட்டங்கள், ஆணைகள் ஆகியவற்றை அனைத்து நிலைகளிலும் ஆராய்ந்து மறுமதிப்பீடு செய்திடவும் மற்றும் அதற்குரிய நடவடிக்கைகளை அரசுக்குப் பரிந்துரை செய்திடவும், உயர்மட்ட அளவிலான குழு ஒன்றினை அமைப்பதென்பது மிக, மிக அவசியமாக வந்திருக்கிறது.
நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் ஏற்படுத்தாத வகையில், நிர்வாகத் துறைகளிலும், பேரவைகளிலும், நீதிமன்றக் கிளைகளிலும், மாநிலங்கள் அதிகபட்ச தன்னாட்சி உரிமை பெற்றிட உரிய நடவடிக்கைகளை பரிந்துரை செய்தல்
1971-இல் அமைக்கப்பட்ட இராஜமன்னார் குழு மற்றும் ஒன்றிய-மாநில உறவுகள் குறித்த ஏனைய ஆணையங்களின் பரிந்துரைகளையும், 1971 முதல் நாட்டில் நிலவும் பல்வேறு அரசியல், சமூகம், பொருளாதார மற்றும் சட்டம் சார்ந்தவற்றில் இருக்கக்கூடிய வளர்ச்சியினையும் உயர்நிலைக் குழு கருத்தில்கொள்ளுதல் வேண்டும்.
அந்த வகையில் இன்றைய காலகட்டத்தில், மக்களாட்சிக் கருத்தியலை சூழ்ந்து இருக்கும் கருமேகங்களுக்கிடையே தெளிவான ஒளி பாய்ச்சிட, காலம் நம்மை அழைக்கிறது. தேவை எழும்போதெல்லாம் நாட்டிற்கே வழிகாட்டும் தமிழ்நாடு, இந்த முறையும் தன்னுடைய வரலாற்றுக் கடமையை நிறைவேற்றிட முன் வருகிறது.
வளம் செழிக்கும் மாநிலங்களே, வலிமையான நாட்டினை உருவாக்கிடும் என்ற தெளிவோடு, பேரறிஞர் அண்ணா காட்டிய வழியில், முத்தமிழறிஞர் கலைஞர் முன்வைத்த “மாநிலத்தில் சுயாட்சி-மத்தியில் கூட்டாட்சி” எனும் முழக்கத்தினை செயல்படுத்தி மக்களாட்சி தத்துவத்தினை இந்தியத் திருநாட்டில் முழுமையாக மலரச் செய்வோம் என இவ்வாறே அவர் உரையாற்றினார்..