தேர்தல் பத்திரங்கள் என்ற பெயரில் பாஜக இந்தியாவிற்கு செய்த மோச செயல்..!!
‘
தேர்தல் ஆரம்பித்த காலத்தில் இருந்தே கட்சிகள் நன்கொடைகள் வாங்கித்தான் கட்சியை வளர்க்கின்றன. அச்சடித்த காகிதக் கட்டில் ரசீது வழங்குவதில் தொடங்கி ஆம் ஆத்மி, மக்கள் நீதி மய்யம் தொடங்கப்பட்ட போது தத்தமது கட்சி வலைதளங்களில் யார் யார் எவ்வளவு கொடுத்திருக்கிறார்கள் என்பதை பொதுமக்கள் பார்வைக்கு வைத்தது வரை நன்கொடைகள் எல்லா தளங்களிலும் வளர்ந்திருக்கின்றன.
அண்ணாச்சி பெட்டிக் கடை தொடங்கி அம்பானி வரை எல்லா நிறுவனங்களுக்கும், எல்லா கட்சிகளுக்கும் இது பொருந்தும். எந்தக் கட்சியும் நன்கொடை பெற்றதல்ல இங்கு பிரச்னை. தேர்தல் பத்திரங்களில் நிதி பெற்ற புகார்களில் பாஜகவிற்கும் மற்ற மாநிலக் கட்சிகளுக்கும் பெரும் வித்தியாசம் இருக்கிறது.
CBI, அமலாக்கத்துறை (ED), வருமானவரித்துறை (IT) இந்த மூன்று அமைப்புகளும் எல்லா நிறுவனங்களிலும் நினைத்தபோதெல்லாம் திடீரென ரெய்டு போய்விட முடியாது. சட்டவிரோத செயல்கள், அரசை ஏமாற்றியதற்கான முகாந்திரங்கள், போலி கணக்குகள், பினாமி சொத்துக்கள் இப்படி அடிப்படை தரவுகளை ஆராய்ந்து அந்த சந்தேகத்தின் அடிப்படையிலேயே ரெய்டுக்கு போகிறார்கள் வழக்கு பதிகிறார்கள்.
சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட நிறுவனங்களை ரெய்டு செய்து, அவைகளின் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்காமல் இருக்க, அந்த நிறுவனங்களையே மிரட்டி ஒரு தேசியக் கட்சி இத்தனை ஆண்டுகளாக சட்ட பூர்வமாகவே பணம் பறித்திருக்கிறது என்பதுதான் இதில் கவனிக்கவேண்டியது.
உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் சொன்னால், @BJP4India சட்ட விரோதமாக எந்த ஊழலும் செய்யவில்லை. சட்ட விரோதமான நிறுவனங்களிடமிருந்து அரசுக்கு வந்து சேரவேண்டிய பொதுமக்கள் பணத்தை, அந்த நிறுவனங்களையே மிரட்டி பணம் பெறும் ஊழல் வடிவத்தையே சட்டபூர்வமாக மாற்றியிருக்கிறார்கள்.
மக்களின் வரிப்பணத்தை ஒன்றிய அரசின் அமைப்புகளே சேர்ந்து நடத்திய கூட்டுக் கொள்ளை (Organised Loot) இது. இப்படி ஒரு கொடுமையான வடிவத்தை அறிமுகப்படுத்தி ஒரு கட்சி சட்டபூர்வமாக எல்லோருடைய கண்களுக்கு முன்பாகவும் செய்த நூற்றாண்டின் ஊழல் இது.
ஒரு தேசியக் கட்சிக்கு பத்து ஆண்டுகளாக பணம் வசூலித்துக் கொடுக்கும் வேலையை செய்துவந்த @CBIHeadquarters @dir_ed @IncomeTaxIndia இந்த அமைப்புகளை எந்த மாநிலக்கட்சியால் இயக்க முடியும்?
பாஜக எனும் ஒரு கட்சிக்கு நாடு முழுக்க பணம் வாங்கி கொடுக்கும் தரகர்களாக இந்த அமைப்புகள் செயல்பட்டிருக்கின்றன. எதிர்க்கட்சி தலைவர்களை சிறைக்கு அனுப்பியிருக்கின்றன. அந்தப்பணத்தில் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள், எம்பிக்களை விலைக்கு வாங்க உதவியிருக்கின்றன. பாஜகவில் வந்து சேர்ந்த மாற்றுக்கட்சியினரின் ஊழல் வழக்குகளை நீர்த்துப்போக செய்திருக்கின்றன. இதன்பேர் அதிகார துஷ்பிரயோகம். பணம் அல்ல இங்கு பிரச்சனை. உண்மையில் பணம்தான் இந்த பிரச்சனையில் Least bothered element.
இந்திய அரசு நிர்வாகத்தின், அரசியல் சாசன அமைப்புகளின் மதிப்பையும் நம்பிக்கையையும் மொத்தமாக சீர்குலைத்து சின்னாபின்னமாக்கி இந்திய இறையாண்மை மீது நடத்தப்பட்ட மோசமான தாக்குதல் இது.