திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பால்குடம் எடுத்து வந்த பக்தர்களை வேண்டுதல்களை நிறைவேற்ற தரிசனத்திற்கு அனுமதிக்காததால் வேதனையுடன் பக்தர்கள் திரும்பி சென்றனர்.
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் சிறந்த பரிகார ஸ்தலமாக விளங்கி வருகிறது. இதனால் திருவிழா காலங்களை தவிர்த்து கோவிலுக்கு பக்தர்கள் வரும் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சிறந்த பரிகார ஸ்தலமாக விளங்குவதால் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வரும் பக்தர்கள் காவடி எடுத்தும் வேல் குத்தியும் பால்குடம் எடுத்தும் அங்க பிரதமர் செய்தும் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.
இந்த நிலையில் வேண்டுதல்களை நிறைவேற்ற வரும் பக்தர்களுக்கு தனி வரிசை ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்தார். இதனை எடுத்து கூட்ட நேரத்தில் வேண்டுதல்களை நிறைவேற்ற வரும் பக்தர்களுக்கு தனி வரிசை ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. கண் துடைப்பு நாடகம் போல் சில நாட்களுக்குப் பிறகு அந்த வரிசை நிறுத்தப்பட்டது. இதனால் வேல் குத்தி, காவடி எடுத்து, பால்குடம் எடுத்து வரும் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற முடியாமல் தவித்து வந்தனர்.
இந்த நிலையில் இன்று குடும்பத்துடன் பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள் சண்முகாஸ் மண்டபம் முன்பு பாதுகாப்பு பணியில் இருந்த முன்னாள் ராணுவ வீரர்கள் தரிசனத்திற்கு உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள் மனவேதனையுடன் திரும்பிச் சென்று பொது தரிசனத்தில் தரிசனம் செய்ய சென்றனர்.