கர்நாடக சட்டமன்ற தேர்தலில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பாஜக தனது வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், அதிமுகவின் கனவிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் கூட்டணியில் அதிமுக நீடிக்க வேண்டும் என அதிமுக நிர்வாகிகள் பலர் கருதி வந்தனர். மேலும் தமிழர்கள் அதிகம் வசிக்கும் 8 தொகுதிகளில் அதிமுக சார்பில் வேட்பாளர்களை அறிவிக்க வேண்டும் என்பதும் பெரும் எதிர்பார்ப்பாக இருந்து வந்தது.
இதுவரை அதிமுகவுடனான கூட்டணி குறித்து எவ்வித அறிவிப்பையும் பாஜக வெளியிடாத நிலையில், 212 தொகுதிக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் பாஜகவுடனான கூட்டணியில் களமிறங்கும் அதிமுகவின் கனவு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது.குறிப்பாக தமிழர்கள் அதிகமுள்ள தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளது அதிமுகவிற்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.
பாஜக கூட்டணி இல்லாவிட்டாலும், அதிமுக தனித்து போட்டியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளது. இருப்பினும் ஒருவேளை பாஜகவிற்கு ஆதரவு அளித்தால், அதிமுக தனது வேட்பாளர்களை களமிறக்காமல் தேர்தலில் இருந்து விலக வேண்டிய நிலை ஏற்படும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே தமிழ்நாடு பாஜகவிற்கும், அதிமுகவிற்கும் இடையே உரசல் நீடித்து வரும் நிலையில், இது பாஜக தலைமை அதிமுகவிற்கு விடுத்த மறைமுக எச்சரிக்கையோ என்ற கருத்து பரவியுள்ளது.