பழிக்கு பழி.. கூலிப்படை ஏவி இளைஞர் கொலை வழக்கில் ..மேலும் 2 பேர் கைது..
கொலை நடக்க காரணம்:
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே வடிவேல் முருகன் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு, பழிக்கு பழியாக தீபக் ராஜாவை அவர்கள் கொலை செய்துள்ளனர்.
அதாவது வடிவேல் முருகன் கொலையில் தீபக் ராஜாவுக்கு முக்கிய பங்கு இருந்ததால் தீபக் ராஜாவை தீர்த்துக்கட்ட வடிவேல் முருகன் தரப்பினர், கூலிப்படையை சேர்ந்த நவீன் என்பவரை அணுகி திட்டம் தீட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து நவீன் தனது அடியாட்களை வைத்து சம்பவத்தன்று தீபக் ராஜாவை கொலை செய்ததாக தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் இக்கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் நவீன் தற்போது கைதாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இருவர் கைது:
நெல்லையில் கடந்த 20ம் தேதியன்று
பாளைங்கோட்டை கேடிசி நகர் பகுதியில் பசுபதி பாண்டியணின் ஆதரவாளரான தீபக் ராஜா கொலையில் இதுவரை ஸ்ரீவைகுண்டம் ஐயப்பன், முன்னீர்பள்ளம் ஐயப்பன், வல்லநாடு தம்பான், மேலநத்தம் முத்துசரவணன், லட்சுமிகாந்தன், சரவணன், கூலிப்படை தலைவன் நவீன், லெப்ட் முருகன் ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் சுரேஷ், பவித்ரன், முத்து, நம்பிராஜ், காசிராமன், இசக்கிதுரை உள்ளிட்டவர்களை தனிப்படையினர் தேடி வந்த நிலையில் முன்னீர்பள்ளம் சுடலை மகன் விளாகம் சுரேஷ்(21), பாளை அண்ணாநகரை சேர்ந்த முருகன் மகன் நம்பிராஜன்(21) ஆகிய இருவரையும் பாளை போலீசார் கைது செய்துள்ளனர்.
தீபக்ராஜன் கொலை வழக்கு தொடர்பாக சுரேஷ் மற்றும் அவரது கூட்டாளி நம்பிராஜன் இருவரையும் பாளையங்கோட்டை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளனர்.
இதில் சுரேஷ் முன்னீர்பள்ளம் காவல் நிலையத்திலும், நம்பிராஜன் பாளை. ஐகிரவுண்டு காவல் நிலையத்திலும் ரவுடிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தீபக்ராஜன் கொலை வழக்கு தொடர்பாக பவி என்ற பவித்ரன், முத்து, காசிராமன், இசக்கிதுரை உள்ளிட்ட சிலரை பாளையங்கோட்டை போலீசார் தேடி வருகின்றனர்.
-பவானிகார்த்திக்