பிரிட்டனின் முதல் இந்திய ஹோட்டல்: வீராசாமி மூடப்படுகிறதா? அதிர்ச்சியில் லண்டன் இந்தியர்கள்
பிரிட்டன் தலைநகர் லண்டனில் இப்போது பல இந்திய ஹோட்டல்கள் இயங்கிக் கொண்டிருக்கலாம். ஆனால், லண்டனில் இந்திய ஹோட்டல்களுக்கு எல்லாம் தாய் போன்றது வீராசாமி ரெஸ்டாரன்ட்தான். பிரிட்டனில் தொடங்கப்பட்ட முதல் இந்திய ஹோட்டல் இதுததான். கடந்த 1926ம் ஆண்டு லண்டன் ரெஜன்ட் தெருவிலுள்ள விக்டோரியா ஹவுசில் இந்த ஹோட்டல் இயங்க தொடங்கியது. வீராசாமி என்ற சுத்தமான இந்திய பெயருடன் இந்த ஹோட்டல் இயங்கி வந்தாலும், இதை தொடங்கியவர் எட்வர்ட் பால்மர் என்ற ஆங்கிலோ இந்தியர்தான் இவர், இந்திய பிரிட்டன் ராணுவத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
லண்டனுக்கு செல்லும் ஒவ்வொரு இந்தியர்களும் இந்த ஹோட்டலுக்கு விசிட் அடிக்காமல் இருக்க மாட்டார்கஎள். பிரிட்டனின் மறைந்த மன்னர் எட்வர்டு, மறைந்த பிரதமர் வின்ஸ்டன்ட் சர்ச்சில், ஸ்வீடன் மன்னர் கட்ஸவ், ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, சார்லி சாப்ளின், பிரிட்டன் இளவரசி ஆனி, ஜோர்டான் மன்னர் கிங் அப்துல்லா வரை பல பிரபலங்கள் இந்த ஹோட்டலின் வாடிக்கையாளர்கள்.
இந்த ரெஸ்டாரண்டின் உள் அலங்காரம் இந்திய அரண்மனைகளை நினைவு கூறும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். காஷ்மீரி, ஹைதராபாதி, மொகல், பஞ்சாபி, தென்னிந்திய உணவுகள் என அனைத்து வகை இந்திய உணவுகளும் இந்த ரெஸ்டாரண்டில் கிடைக்கும். அதேடு, ஆங்கிலோ இந்திய வகை உணவுகளும் இந்த ஹோட்டலின் சிறப்பம்சம் ஆகும். இந்த உணவகம் இப்போது கேரள பாணியிலான முட்டை கபாப் முதல் காஷ்மீரி ரோகன் ஜோஷ், பெங்காலி பப்பா மச் வரை அனைத்தையும் வழங்குகிறது. இத்தகைய புகழ் பெற்ற வீராசாமி ஹோட்டல்தான் விரைவில் மூடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் பிரிட்டன் வாழ் இந்தியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
வீராசாமி ஹோட்டல் இயங்கி வரும் விக்டோரியா ஹவுஸ் கிரவுன் எஸ்டேட் என்ற நிறுவனத்துக்கு சொந்தமானது. இந்த நிறுவனத்துடனா ஒப்பந்தம் வரும் ஜுன் மாதத்துடன் முடிவுக்கு வருகிறது. இங்கு மற்றோரு நிறுவனத்தின் அலுவலகம் அமைக்க இடம் கொடுக்க கிரவுன் எஸ்டேட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
ரெஸ்டரான்டின் நுழைவு வாயிலை ஒட்டியுள்ள 11 சதுர மீட்டர் இடமும் புதிய அலுவலகம் அமைக்க தேவைப்படுவதாக கிரவுன் எஸ்டேட் நிறுவனம் கூறியுள்ளது. இதனால், நுழைவு வாயில் இல்லாமல் ரெஸ்டாரன்ட் எப்படி இயங்க முடியும்?. அதனால், ஒப்பந்தத்தை புதுப்பிக்க விரும்பவில்லை ‘ என்று கிரவுன் எஸ்டேட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 1997ம் ஆண்டு முதல் வீராசாமி ஹோட்டலை இந்தியரான ரஞ்சித் மாத்ரானி அவரின் மனைவி நமீதா பஞ்சாபி ஆகியோர் நிர்வகித்து வருகின்றனர். தற்போதைய நிலை குறித்து, வீராசாமி ரெஸ்டாரன்டின் தலைவர் ரஞ்சித் மாத்ரானி கூறுகையில்,’ கிரவுன் எஸ்டேட் நிறுவனம் அலுவலகத்துக்கு வழங்கப்படும் வாடகையை எங்களிடத்தில் கேட்டது. எங்களால் அதை கொடுக்க முடியவில்லை. இப்போது, திடீரென்று ஒப்பந்தத்தை புதுப்பிக்க மறுத்துள்ளனர். அவர்கள் நினைத்தால் இதை எளிதாக செய்யலாம். ஆனால், செய்ய விரும்பவில்லை. புதியதாக ஒரு இடத்தை தேர்வு செய்ய எங்களுக்கு குறைந்தது 2 ஆண்டுகள் ஆகும். எங்களால் திடீரென்று ஒரு இடத்தை பார்த்து ரெஸ்டாரன்டை தொடங்கி விட முடியாது. இதனால், வேலை இழப்பு ஏற்படுவது மட்டுமல்ல எங்களது உண்மையான வாடிக்கையாளர்களையும் மன வேதனையில் ஆழ்த்தியுள்ளது . யாரும் வரலாற்றை பார்ப்பதில்லை’ என்கிறார் வருத்தத்துடன்.