ஆத்தூர் அருகே ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் திருட்டு..! சிக்கிய கும்பல்..!
ஆத்தூர் அருகே ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடித்த வழக்கில் பிரபல கொள்ளையன் கைது. கைது செய்யப்பட்ட கொள்ளையனிடம் இருந்து 12 பவுன் தங்கநகை பறிமுதல். இதுவரை அந்த கொள்ளையன் ஒன்பது மாவட்டங்களில், 65 வழக்குகளில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே நடுவலூர் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் அங்கமுத்து [ வயது 65 ], இவரது இரண்டு மகன்களுக்கும் திருமணமனம் ஆன நிலையில் தனது மனைவி மோகனாவுடன் தனியாக வசித்து வருகிறார்.
இன்னிலையில் வயதான தம்பதி இருவரும் கடந்த மாதம் 30ம் தேதி இரவு வீட்டின் முன்பக்க கேட்டை பூட்டி விட்டு மேல் மாடியில் காற்றோட்டமாக படுத்து உறங்கியுள்ளனர், பின்னர் அதிகாலையில் எழுந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் அங்கமுத்து வீட்டிற்கு சென்று பார்த்த போது பூட்டியிருந்த முன்பக்க கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் வீட்டினுள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 15 பவுன்தங்கநகை, 75 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் கொள்ளை போனது என தெரியவந்தது.
இதேபோல் அதே பகுதியில் வசிக்கும் லாரி ஓட்டுனர் அங்கமுத்து வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் வீட்டில்பணம், நகை எதுவும் இல்லாததால் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்,
இதுகுறித்து ஒய்வுபெற்ற ஆசிரியர் அங்கமுத்து கெங்கவல்லி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்தனர், இதனையடுத்து சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவக்குமார் அவர்களின் உத்தரவின் பேரில் ஆத்தூர் டி,எஸ்,பி, நாகராஜன் மேற்பார்வையில் தனிப்படை அமைத்து போலீசார் கொள்ளையர்களை தேடிவந்தனர்.
இன்னிலையில் தனிப்படை போலீசார் காட்டுக் கோட்டை பகுதியில் இரவு கண் காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர், அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்ட போது அவர் முன்னுக்கு பின் பதிலளித்ததால் வாலிபரை ஆத்தூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது, அதில் வாலிபர் ஆத்தூர் அருகே உள்ள அம்மம்பாளையம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன்வெங்கடேஷ் [ வயது 29 ], என்பதும் இவர் நடுவலூரில் உள்ள ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் நகை, பணத்தை கொள்ளையடித்தது தெரியவந்தது.
மேலும் இவர் மீது சேலம், கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சி, நாமக்கல் உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதும் இவர் 65 வழக்குகளில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி என்பதும் தெரியவந்தது.
வெங்கடேஷை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 12 பவுன் தங்க நகையையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.