தூத்துக்குடி அருகே சிஏஏ எதிர்ப்பு போராட்டம் – விண்ணதிரச் செய்த முழக்கங்கள்!

சென்னை வண்ணாரப்பேட்டையில் போராட்டம் நடத்திய இஸ்லாமியர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், சிஏஎவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியில் போராட்டம் நடைபெற்றது.

சென்னை வண்ணாரப்பேட்டையில் சிஏஏவுக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டம் நடத்திய இஸ்லாமியர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் அருகேயுள்ள ஆழ்வார்திருநகரியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆழ்வார்திருநகரி வட்டார ஜமாத், இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் நேற்று (பிப்-16) நடத்தப்பட்ட இப்போராட்டத்தில் குழந்தைகள் முதல் பெண்கள் வரை ஏராளமானோர் கலந்துகொண்டனர். அழகியமணவாளபுரம் அல்மஸ்ஜித் பள்ளிவாசலில் இருந்து தொடங்கிய பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று, திருநெல்வேலி – திருச்செந்தூர் சாலையில் உள்ள காமராஜர் சிலை அருகே நிறைவடைந்தது. பேரணியாக சென்றவர்கள் சுமார் 65 மீட்டர் நீளமுள்ள தேசியக் கொடியை உயர்த்திப் பிடித்தவாறு, தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்துசெய், இன்குலாப் ஜிந்தாபாத் என விண்ணதிரும் வகையில் முழக்கமிட்டப்படி சென்றனர்.

பேரணியின் இறுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் முரசு தமிழப்பன், செய்யது அஹம்மது ஆகியோர் உரை நிகழ்த்தினர். அதில், வண்ணாரப்பேட்டை தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், CAA, NRC, NPR ஆகிய சட்டங்களை ரத்து செய்யக்கோரியும் வலியுறுத்தினர். ஆழ்வார்திருநகரி மட்டுமின்றி சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள ஏரல், பேட்மாநகரம், கொங்காரயக்குறிச்சி ஆகிய பகுதிகள் இருந்தும் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இப்பேரணிக்கு ஐக்கிய முஸ்லிம் ஜமாத் தலைவர் ஹமீது தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் அப்துல் ரபியூதீன் முன்னிலை வகித்தார்.

What do you think?

கோவிட்-19 : பலி எண்ணிக்கை 1,765 ஆக அதிகரிப்பு

“சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடியாது” – திமுக வெளிநடப்பு