ஜம்மு காஷ்மீரில் பஹால்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 சுற்றுலாப்பயணிகள் பலியாகினர். இந்த சம்பவத்தால் கடும் கோபமடைந்த இந்தியா சிந்து நதி ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக கூறியுள்ளது. அதே வேளையில், பாகிஸ்தானுக்குள் தண்ணீர் பாய்வதைத் தடுக்க இந்தியா எடுக்கும் எந்தவொரு முயற்சியும் போர் நடவடிக்கையாகக் கருதப்படும் என்று பாகிஸ்தான் கண்டித்துள்ளது. பாகிஸ்தானில் 93 சதவிகிதம் விவசாயம் சிந்து நதி நீரை நம்பிதான் உள்ளது. 61 சதவிகித மக்கள் இந்த நதியை ஒட்டிதான் வசிக்கின்றனர். ஹராப்பா, மொகஞ்சதாரோ போன்ற நாகரீகங்கள் இந்த நதிக்கரையில்தான் செழித்து வளர்ந்தன. பண்டைய இந்த நகரங்களும் பாகிஸ்தானில்தான் உள்ளன. இதில், ஹரப்பா ராவி நதிக்கரையிலும் மொகஞ்சாதாரோ சிந்து நதிக்கரையிலும் அமைந்துள்ளன.
சிந்து நதி பாகிஸ்தானுக்குள் பாய்வது நிறுத்தப்பட்டால், அந்த நாட்டில் விவசாயமே நடைபெறாது. அதே வேளையில், இந்தியாவால் சிந்து நதியை பாகிஸ்தானுக்குள் செல்வதை நிறுத்த முடியாது என்று அந்த நாட்டு நிபுணர்கள் கூறி வருகின்றனர்.
அமெரிக்காவின் டஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பாகிஸ்தானை சேர்ந்த நகர்ப்புற மற்றும் சுற்றுச்சூழல் நிபுணர் ஹசன் எஃப் கான் கூறுகையில், பாகிஸ்தானுக்குள் தண்ணீர் பாய்வதை இந்தியாவால் நிறுத்த முடியாது. சிந்து, ஜீலம் மற்றும் செனாப் ஆகியவை மே மற்றும் செப்டம்பர் மாதங்களில் பனி உருகும்போது பல்லாயிரக்கணக்கான கன மீட்டர் தண்ணீரைக் கொண்டு செல்லும் மிகப்பெரிய ஆறுகள் . இவற்றை செயற்கையாக தடுத்து நிறுத்தி விட முடியாது. அதிக தண்ணீரை கொண்டு செல்லும் இது போன்ற நதிகளை தடுத்து நிறுத்த முயற்சித்தால், இந்தியாவில் வெள்ள பெருக்குதான் ஏற்படும். இந்தியாவில் இருந்து மேற்கு நோக்கி ஓடும் நதிகளை தடுக்கும் வல்லமை இந்தியாவிடம் கிடையாது. அப்படியே தண்ணீர் நிறுத்தப்பட்டாலும் இது தொடர்பாக உலக வங்கியிடம் பாகிஸ்தான் முறையிடும். ஏனென்றால், உலக வங்கியின் முன்னிலையில்தான் இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. உலக வங்கித் தலைவரும் அதில் கையொப்பமிட்டுள்ளார். இதனால், தண்ணீரை நிறுத்துவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.
எனினும் வறட்சிக் காலங்களில் பாகிஸ்தான் நெருக்கடியை உணரும். ஆற்று படுகையில் நீரின் ஓட்டம் குறைவாக இருக்கும்போது, இந்தியா இந்தப் பகுதியில் புதிய உள்கட்டமைப்பை உருவாக்குவது ஒரு அச்சுறுத்தலாக இருக்கலாம் பெரிய அளவிலான அணை அல்லது நீர் வழித்தடத் திட்டத்தை தடுக்க பல ஆண்டுகள் கட்டுமானத்துக்கே செலவிட வேண்டும். காஷ்மீரில் இதுபோன்ற உள்கட்டமைப்பைக் கட்டுவது புவியியல் ரீதியாக சவாலானது . அதிக நிதிச் செலவு பிடிக்க கூடியது .
மேற்கு நோக்கி பாயும் நதிகளில் பெரிய புதிய நீர்த்தேக்கங்களைக் கட்ட இந்தியா எடுக்கும் எந்தவொரு முயற்சியும் ஒரு போர் நடவடிக்கையாகக் கருதப்படும் என்று பாகிஸ்தான் நீண்ட காலமாகக் கூறி வருகிறது. இன்றைய செயற்கைக்கோள் யுகத்தில் பாகிஸ்தான் இந்தியாவின் கட்டுமானங்களை எளிதாக கண்டுபிடித்து விடும். கட்டுமாதனங்களை தகர்க்க பாகிஸ்தான் முயற்சிக்கும். இது பெரிய அரசியல் மற்றும் ராணுவ ரீதியான மோதலுக்கு வழி வகுக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.