பெட்ரோலிய ரசாயான முதலீட்டு மண்டலம் ரத்து; மதிமுக போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி – வைகோ

பெட்ரோலிய ரசாயன முதலீட்டு மண்டலம் ரத்து செய்யப்பட்டது மதிமுகவின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் பெட்ரோலிய இரசாயனம் மற்றும் ரசாயனப் பொருட்கள் முதலீட்டு மண்டலம் அமைப்பதற்கு 2017 ஆம் ஆண்டு தமிழக அரசு குறிப்பாணை வெளியிட்டதையும், 45 கிராமங்களில் உள்ள 57,500 ஏக்கர் விளை நிலங்கள் கையகப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்ததையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால், வேளாண்மைத் தொழிலே அழிந்துபோகும் என்பதால் பெட்ரோலிய இரசாயன முதலீட்டு மண்டலம் அமைக்கும் குறிப்பாணையைத் திரும்பப் பெற வேண்டும் என்று 2017 ஆம் ஆண்டு அறிக்கை வெளியிட்டதையும், அதே ஆண்டு கடலூரில் மதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தியதையும் வைகோ நினைவுகூர்ந்துள்ளார்.

காவிரி படுகை மாவட்டங்களை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக முதலமைச்சர் அறிவித்தபோது, தமிழக அரசு வெளியிட்ட பெட்ரோலிய ரசாயன மற்றும் ரசாயன முதலீட்டு மண்டல குறிப்பாணையை ரத்து செய்ய வேண்டும் என கடந்த பிப்ரவரி 10 மற்றும் 13 ஆம் தேதிகளில் வெளியிட்ட அறிக்கை மூலம் வலியுறுத்தியதையும் வைகோ குறிப்பிட்டுள்ளார்.

பிப்ரவரி 15 ஆம் தேதி நடைபெற்ற மதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலும் பெட்ரோலிய மண்டலத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் வைகோ தெரிவித்துள்ளார். இந்நிலையில், தமிழக அரசு பெட்ரோலிய மண்டல குறிப்பாணையை ரத்து செய்தது மதிமுக தொடர்ந்து குரல் எழுப்பியதற்கு கிடைத்த வெற்றி என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

மேலும், காவிரி படுகை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக இருக்க வேண்டுமானால், 2018 அக்டோபர் 1 ஆம் தேதி வேதாந்தா, ஓ.என்.ஜி.சி நிறுவனங்களுடன் போடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் ரத்து செய்ய வேண்டும் என, வைகோ அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

What do you think?

சிங்கப்பூரில் கொரோனா; மத்திய அரசு எச்சரிக்கை!

கைலாசத்தை கட்டி முடித்து விட்ட்டேன் …!நித்யானந்தா