“அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது” – நீதிமன்றம் அதிரடி
தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவையான ஊழியர்களை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு செய்து வருகிறது.
திறமையான ஊழியர்களை கண்டறிய பல்வேறு போட்டித்தேர்வுகள் மற்றும் நேர்காணல் ஆகியவற்றை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 1, குரூப் 2 &2A, குரூப் 3, குரூப் 4 என குரூப் 8 வரை பல்வேறு பதவிகளுக்கு தேர்வுகளை நடத்துகிறது.
டிஎன்பிஎஸ்சி நடத்தும் அரசுப் பணிகளுக்கான தேர்வில் தமிழ் மொழித்தாளில் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறுவது அவசியம்.
மேலும் தமிழ் மொழித்தாளில் 40 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே பொது அறிவு மற்றும் திறனறிவு தேர்வுக்கான விடைத்தாள் மதிப்பீடு செய்யப்படும் என தமிழக அரசு கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பரில் அரசாணை பிறப்பித்தது.
இந்த அரசாணையின் அடிப்படையில், தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 6,244 குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பாணையை டிஎன்பிஎஸ்சி, கடந்த ஜனவரியில் வெளியிட்டது.
இந்த அறிவிப்பை எதிர்த்தும், தமிழ் மொழித்தாள் தேர்வில் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே பொது அறிவு, திறனறிவு தேர்வுத் தாள் மதிப்பீடு செய்யப்படும் என்ற அரசாணையை எதிர்த்தும் நிதேஷ் உள்ளிட்ட 10 விண்ணப்பதாரர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கு ஏற்கனவே நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பாக விசாரணைக்கு வந்தபோது, விண்ணப்பதாரர்களுக்கான கல்வித் தகுதியை நிர்ணயிக்க அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது என்றும், குரூப் 4 பதவிகளை வகிப்பவர்கள், மக்களுடன் நேரடியாகதொடர்பு கொள்ள தமிழ் மொழியில் புலமை பெற்றிருப்பது அவசியம் என்றும், இதுதொடர்பான அரசின் கொள்கை முடிவில் தலையிடமுடியாது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இநதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் ஆர். மகாதேவன், முகமது ஷபீக் ஆகியோரிடம் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், இந்த அரசாணைப்படி ஏற்கெனவே பல தேர்வுகள் நடத்தப்பட்டு விட்டது.
அரசுப்பணிகளுக்கு தமிழ் மொழித்தாளில் தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயம் என்ற அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது.
எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என கூறப்பட்டதையடுத்து நீதிபதிகள் இந்த வழக்கை தள்ளு படி செய்துள்ளனர்.
-பவானிகார்த்திக்