டி.என்.பி.எஸ்.சி முறைகேடு; அழியும் பேனா தயாரித்தவர் கைது!

டி.என்.பி.என்.பி.எஸ்.சி முறைகேட்டில் பயன்படுத்திய தானாக அழியும் மையுடைய பேனா தயாரித்தவரை சிபிசிஐடி அதிகாரிகள் கைது செய்தனர்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற குரூப் 4 தேர்வில் ராமநாதபுரம், கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வெழுதியவர்கள் முறைகேடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டு, 99 தேர்வர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிபிசிஐடி, குரூப் 4 மட்டுமல்லாது குரூப் 2ஏ தேர்வுகளிலும் முறைகேடு நடந்திருப்பதை உறுதி செய்தது.

இந்த முறைகேடுகளுக்கு மூளையாக செயல்பட்ட சென்னை முகப்பேரைச் சேர்ந்த ஜெயக்குமார், காவலர்கள் சித்தாண்டி, கார்த்தி, பூபதி, சித்தாண்டியின் சகோதரர் வேல்முருகன் உள்ளிட்ட 45-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். காவலில் எடுக்கப்பட்ட இடைத்தரகர் ஜெயக்குமாரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடுகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்ததும், முறைகேடுகளுக்கு வசதியாக தானாக அழியும் மையுடைய பேனாவை தேர்வர்கள் பயன்படுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, அழியும் பேனாவை தயாரித்து முறைகேடுகளுக்கு கொடுத்து உதவிய சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்த அசோக்குமாரை சிபிசிஐடி காவல்துறையினர் இன்று கைது செய்தனர். அவர் எத்தனை ஆண்டுகளாக இந்த பேனாவை தயாரித்து வருகிறார், ஜெயக்குமாருடனான தொடர்பு ஆகியவை குறித்து அவரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

What do you think?

வைகோவின் கோரிக்கைக்கு சட்ட அமைச்சர் விளக்கம்

“நீதிமன்றத்தில் எனக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி” – வைகோ பெருமிதம்!