காவலர் பணி நியமனத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற காவலர் தேர்வு பணி நியமனத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய காவலர் தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் திருவண்ணாமலையைச் சேர்ந்த அன்பரசன் உள்ளிட்ட 15 பேர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

அதில், காவலர் தேர்வில் தேர்வானவர்களில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 1,019 பேரும், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 763 பேரும் சிகரம் என்ற தனியார் பயிற்சி மையத்தில் படித்தவர்கள் என்றும், இந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் குறிபிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் நடக்கும் அனைத்து அரசு பணியாளர் தேர்வுகளிலும் முறைகேடு நடப்பதாக நீதிபதி வேதனை தெரிவித்தார். இதனால் அரசு மீதான நம்பிக்கையை மக்கள் இழக்க நேரிடும் எனவும் அவர் எச்சரித்தார். குறிப்பிட்ட தேர்வு மையத்தில் படித்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மட்டும் எப்படி தேர்வானார்கள், அனைவரும் எப்படி ஒரே மாதிரியாக 69.5 மதிப்பெண்கள் பெற்றார்கள் என்று நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

தேர்வில் முறைகேடு செய்து காவலர் பதவியில் சேர்ந்தால் காவல்துறை நிலை என்ன ஆவது என கேள்வி எழுப்பிய நீதிபதி, தமிழர்கள் நேர்மையை இழந்துவிட்டதாகவும் கூறினார். கிராமப்புற மக்கள் அரசு வேலையை பெரிய விஷயமாக நினைப்பதாகவும் அதனால், தேர்வு நடைமுறையை நிறுத்தி வைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

இதுகுறித்து தமிழக அரசு, தலைமை செயலாளர், காவல்துறை இயக்குநர், சீருடைப்பணியாளர் ஆணையம் உள்ளிட்டோர் மார்ச் 5 ஆம் தேதிக்குள் பதிலளிக்கவும் அவர் உத்தரவிட்டார். அப்போது ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்ற தேர்வுகளில் இதுபோன்ற முறைகேடுகள் நடைபெறவில்லை என நீதிபதிக்கு விளக்கமளித்தார்.

What do you think?

இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூட்டில் தமிழக மீனவர் படுகாயம்

கொரோனா மீட்புப் பணியில் இந்திய போர் விமானம்!