சென்னை – லக்னோ அணிகள் இடையேயான ஐபிஎல் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதனால் பொதுமக்கள் ஆரவாரத்துடன் பல்வேறு இடங்களில் இருந்து வருகை புரிந்துள்ளனர்.
மைதானத்தில் சுமார் 1,300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று அரங்கேறும் 6-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்சும் மோதுகின்றன.
தோனி தலைமையிலான சென்னை அணி தொடக்க ஆட்டத்தில் குஜராத்திடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இன்றைய ஆட்டம் உள்ளூரில் நடைபெற இருப்பது சிறப்பம்சமாகும். ஏனெனில் 2019-ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளூரில் விளையாட இருக்கிறது. ரசிகர்களின் ஆரவாரமும், மெதுவான தன்மை கொண்ட ஆடுகளமும் சென்னை வீரர்களுக்கு நிச்சயம் உத்வேகம் அளிக்கும் என்று நம்பலாம்.
சேப்பாக்கம் மைதானம் சென்னை சூப்பர் கிங்சின் கோட்டையாகும். இங்கு 56 ஆட்டங்களில் ஆடி 40-ல் வெற்றிகளை குவித்துள்ள சென்னை அணி இந்த சீசனில் இங்கிருந்து வெற்றிக்கணக்கை தொடங்குமா என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் இன்று இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்கவுள்ள நிலையில், சென்னை சேப்பாக்கம் பகுதியில் இன்று மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மெட்ரோ ரெயிலில் இலவச பயணம்:
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இந்த சீசனில் சென்னை சேப்பாக்கத்தில் 7 லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. சேப்பாக்கத்தில் நடக்கும் ஐ.பி.எல். போட்டியை பார்க்க வருகை தரும் ரசிகர்கள் இலவசமாக மெட்ரோ ரெயிலில் பயணிக்க வழிவகை செய்யும் வகையில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்துக்கும், சென்னை சூப்பர் கிங்சுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
இதன்படி சேப்பாக்கத்தில் நடக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆட்டத்துக்கான டிக்கெட் வைத்திருக்கும் ரசிகர்கள் டிக்கெட்டில் உள்ள கியூ ஆர் பார்கோடுகளை மெட்ரோ ரெயில் நிலையத்தில் ஸ்கேன் செய்து இலவசமாக பயணிக்கலாம். இரவு நேர போட்டி நடக்கும் நாட்களில் மட்டும் மெட்ரோ ரெயில் சேவை 1 அரை மணி நேரம் நீட்டிக்கப்படும்.
அத்துடன் அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து சேப்பாக்கம் மைதானத்திற்கு சிரமமின்றி செல்ல பேருந்து சேவையும் அளிக்கப்படுகிறது.
மேலும் வடபழனி, சென்டிரல், திருமங்கலம், விம்கோ நகர், நந்தனம் ஆகிய 5 மெட்ரோ ரெயில் நிலையங்களில் பெரிய திரைகளில் ஐ.பி.எல். போட்டி நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
பாதுகாப்பு ஏற்பாடுகள்:
சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் மேற்பார்வையில் 1,300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மைதானத்தின் உள்ளே 4 துணை கமிஷனர்கள் தலைமையில் பாதுகாப்பு பணியில், 1 கூடுதல் துணை கமிஷனர், 10 உதவி கமிஷனர்கள் ஆகியோரும் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
மைதானத்துக்கு வெளியே உதவி கமிஷனர்கள் , இன்ஸ்பெக்டர்கள் ஆகியோர் தலைமையில் பலத்த பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இன்று காலையில் இருந்து கிரிக்கெட் மைதானத்தை சுற்றி உள்ள சாலைகள் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது.
சேப்பாக்கத்தில் கிரிக்கெட் போட்டியை பார்க்க செல்லும் ரசிகர்களுக்கு வழக்கம்போல அதிககட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. சாலையின் ஓரத்தில் காவல் துறையினர் தடுப்புகள் அமைத்து ரசிகர்களை வரிசையாக ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.