முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் திருவுருவச் சிலையை முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தின் புகழ்சால் பெருந்தகையாளர்கள், தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டு தமிழ்நாட்டிற்குப் பெருமைத் தேடித்தந்த அறிஞர் பெருமக்கள், சமூகநீதி, விடுதலை உணர்வுகளை ஊட்டிவளர்த்த கவிஞர்கள், இசை மேதைகள், தமிழ்நாட்டின் தியாக வரலாற்றுக்கு உன்னத சாட்சியங்களாக விளங்கும் தியாகிகள், மேதைகள் மற்றும் அறிஞர்களின் நினைவுகளைப் போற்றிப் பெருமைப்படுத்தும் வகையிலும், தமிழ் சமுதாயத்திற்கு அவர்களின் பங்களிப்பை பெருமைப்படுத்தும் வகையிலும், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் நினைவகங்கள், திருவுருவச் சிலைகள், அரங்கங்கள், நினைவுத் தூண்கள், நினைவுச் சின்னங்கள் ஆகியவை அமைக்கப்பட்டு, சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளான இன்று (15.10.2023) செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் சென்னை, கிண்டி, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் அவர்களின்… pic.twitter.com/J4Wr6Ilm8C
— CMOTamilNadu (@CMOTamilnadu) October 15, 2023
அந்த வகையில், 2021-22ஆம் ஆண்டிற்கான செய்தி மக்கள் தொடர்புத் துறை மானியக் கோரிக்கையில், இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானியாகவும், இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு பெரும் வழிகாட்டியாகவும் திகழ்ந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாமிற்கு சென்னை, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் திருவுருவச் சிலை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி சென்னை, கிண்டி, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாமின் திருவுருவச் சிலையை முதல்வர் இன்று திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.