தேசிய பங்கு சந்தை முறைகேடு வழக்கில் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2013 ஏப்ரல் முதல் 2016 டிசம்பர் வரை தேசிய பங்கு சந்தையின் (NSE) நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக சித்ரா ராமகிருஷ்ணா செயல்பட்டு வந்தார்.
அப்போது, பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக செபி குற்றம்சாட்டியது. முன் அனுபவம் இல்லாத ஆனந்த் சுப்பிரமணியம் என்பவரை தலைமை வியூக அதிகாரியாக நியமித்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதன் காரணமாக, சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ரூ. 3 கோடி அபராதம் மற்றும் பங்குச் சந்தை நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு 3 ஆண்டுகள் தடையும் செபி தரப்பில் விதிக்கப்பட்டது.
இந்த சூழலில், மும்பையில் உள்ள சித்ரா ராமகிருஷ்ணா வீடு உட்பட அவருக்கு தொடர்புடைய அலுவலகங்களில் மும்பை வருமான வரி புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் கடந்த மாதம் சோதனை நடத்தினர்.
இதையடுத்து, கடந்த 6-ம் தேதி தேசிய பங்கு சந்தை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் தலைமை செயல் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணாவை 7 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், 7 நாள் நீதிமன்ற காவல் நிறைவடைந்ததையடுத்து, காவலை மேலும் நீட்டிக்க வேண்டும் என சிபிஐ தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை இன்று(மார்ச்.14) விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் தேசிய பங்குச்சந்தையின் ரகசிய தகவல்களை கசியவிட்டதாக பதிவான வழக்கில் சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு மேலும் 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து சித்ரா ராமகிருஷ்ணா சிறையில் அடைக்கப்பட்டார்.