வெளிநாடுகளில் பணியின்போது உயிரிழக்கும் தமிழர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை மற்றும் திருமண உதவித் தொகை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
வெளிநாடுகளில் பணியாற்றி வரும் குறைந்த வருவாய் பிரிவைச் சேர்ந்த தமிழர்கள் எதிர்பாராதவிதமாக உயிரிழக்க நேரிட்டால், அவர்களது குடும்பத்தைக் காக்கும் பொருட்டு உதவித் தொகை வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகையாக 12 ஆயிரம் ரூபாயும், திருமண உதவித் தொகையாக 20 ஆயிரம் ரூபாயும் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இந்த உதவித் தொகையைப் பெற அயலகத் தமிழர் நலவாரியத்தில் பதிவு செய்திருக்க வேண்டியது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திருமண உதவித் தொகை பெற மணமகனுக்கு 21வயதும், மணமகளுக்கு 18 வயதும் நிறைவடைந்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்வி உதவித் தொகை பெற 11-ஆம் மற்றும் 12-ஆம் வகுப்பு சேர்க்கை பெற்ற மாணவர்கள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ சேர்க்கை பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இதே போன்று, ஒரு குடும்பத்தில் 2 பேருக்கு மேல் உதவித் தொகை வழங்கப்பட மாட்டாது உள்ளிட்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன