சுற்றுலா சென்ற கல்லூரி மாணவர்கள்.. இறுதியில் நேர்ந்த சோகம்…!
சென்னையை அடுத்த தண்டலம் அருகே உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தவர்களான சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியை சேர்ந்த 19 வயதாகும் மாணவர் விஷ்ணு, சென்னை ஆயிரம் விளக்கு மாடல் ஸ்கூல்தெருவை சேர்ந்த 19 வயதாகும் அஸ்வதி மற்றும் சென்னை ஈக்காட்டுத்தாங்கல் பகுதியை சேர்ந்த டிராவிட் (21). சென்னை முகப்பேறு பகுதியை சேர்ந்த சக்திபிரியா (21) இவர்கள் இருவரும் அதே கல்லூரியில் படித்து முடித்தவர்கள் ஆவார்கள்.
இந்த நிலையில் இவர்கள் 4 பேரும் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏலகிரிமலைக்கு சுற்றுலாவிற்கு செல்ல நேற்று முன்தினம் காலை சென்னையில் இருந்து காரில் புறப்பட்டு வேலூர் வழியாக ஏலகிரியை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
இவர்களின் கார் காலை 9.30 மணியளவில் வேலூரை அடுத்த மோட்டூர் பகுதியில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென காரின் முன்பக்க டயர் வெடித்தது.
இதனால் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள தடுப்பை தாண்டி மறுபுறம் உள்ள பெங்களூர்- சென்னை தேசிய நெடுஞ்சாலையை நோக்கி வேகமாக பாய்ந்தது.
அந்த நேரத்தில் பெங்களூருவில் இருந்து சென்னையை நோக்கி வந்து கொணாடிருந்த சரக்கு லாரி மீது கார் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் கார் நொறுங்கி விஷ்ணு, அஸ்வதி, டிராவிட், சக்திபிரியா ஆகிய 4 பேரும் படுகாயமடைந்தனர்.
இதைக்கண்ட அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் உடனடியாக அவரகளை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் வழியிலேயே அஸ்வதி பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 3 பேருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் இந்த விபத்தினால் அந்த பகுதியில் நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து விரிஞ்சிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-பவானி கார்த்திக்