காவிரி – கோதாவரி நதிகள் இணைப்பு : விரிவான வரைவுத் திட்ட அறிக்கை தயார்

காவிரி- கோதாவரி நதிகளை இணைக்க விரிவான வரைவுத் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

காவிரி- கோதாவரி நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்திருந்தார். இந்நிலையில், இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ள நீர்வளம் மற்றும் சமூகநீதித்துறை அமைச்சர் ரத்தன் லால் கட்டாரியா, திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு சம்மந்தப்பட்ட மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டிருப்பதாக குறிப்பிட்டார்.

ஒருமித்த கருத்துடன் சட்டபூர்வமான அனுமதியுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார். காவிரி -கோதாவரி நதிகளுக்கு மூன்று இணைப்புகள் மூலம் தண்ணீரை கொண்டு செல்ல தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனம் திட்டம் தயாரித்திருப்பதாகவும் கட்டாரியா கூறியுள்ளார். வரைவுத் திட்டத்தின்படி கோதாவரியின் ஜனம் பேட்டையிலிருந்து கிருஷ்ணா – நாகார்ஜுன சாகர் வரை முதலில் இணைக்கப்படும். அங்கிருந்து சோமசீலா – பெண்ணாறு வரை இரண்டாவது கட்டமாகவும், சோம சீலாவிலிருந்து கல்லணை வரை மூன்றாவது கட்டமாகவும் இணைக்கப்படும்.

இதன் மூலம் கோதாவரியிலிருந்து நாகார்ஜுனா சாகருக்கு 247 டிஎம்சி தண்ணீரை திருப்பி விடவும், பின்னர் அங்கிருந்து தேவைக்கு ஏற்ப கிருஷ்ணா, பெண்ணாறு வழியாக காவிரி படுகைக்கு தண்ணீரை அனுப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 2018 -19-ஆம் ஆண்டின் கணக்கின்படி 60 ஆயிரத்து 361 கோடி ரூபாய் செலவாகும் என தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனம் மதிப்பிட்டுள்ளதாக வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

What do you think?

காக்னிசெண்ட் நிறுவனத்தில் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு!

குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியல் வெளியீடு