தொடரும் இருசக்கர வாகன திருட்டு…!! மர்ம நபர்களை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலிஸ்…!!
தருமபுரி நகர பகுதிகளில் தொடர் இருசக்கர வாகன திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி கைது. நான்கு இருசக்கர வாகனங்கள் பறிமுதல்.
தருமபுரி நகர பகுதிகளில் கடந்த சில தினங்களாக இருசக்கர வாகனஙகள் திருடபட்டு வருகிறது. குறிப்பாக மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் தொலை தொடர்பு அலுவலகம்,அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகள் மற்றும் கோல்டன் தெரு, குமாரசாமிபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வீட்டிற்கு முன் நிறுத்தி வைக்கபட்டு இருந்த விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களை மர்ம நபர்கள் இரவோடு இரவாக திருடிச் சென்று வருகின்றனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்கள் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்து வந்தனர். காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து திருடப்பட்ட பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவை கண்காணித்து ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு காவல் துறையினர் தருமபுரி நகர பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். இதில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த இளைஞரை பிடித்து விசாரணை செய்ததில் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார். இதனை தொடர்ந்து காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை செய்ததில் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியை சேர்ந்த சீனிவாசன் (26) என்பதும் தெரிய வந்தது. இவர் நகரப் பகுதியில் கடந்த மாதத்தில் மட்டும் தொடர்ந்து நான்கு பல்சர் பைக் திருடியது தெரியவந்தது.