தொடர் கனமழை.. உயிரிழந்தோர் குடுபத்திற்கு நிதியுதவி அறிவித்த ஆந்திர அரசு..!
வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திராவில் கடந்த சில தினங்களாகவே கன மழை பெய்து வருகிறது.
இந்த கனமழை காரணமாக அங்குள்ள நீர் நிலைகளில் நீர் நிரம்பி மழைநீர் ஊருக்குள் புகுந்தது. இதில் சுமார் 62 ஆயிரம் எக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெல், கரும்பு, வாழை, தக்காளி, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமாகின.
இடைவிடாமல் பெய்த கன மழையால் மலையில் மண் சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு அங்கிருந்த வீடுகளின் மீது விழுந்ததில் வீடுகள் தரைமட்டமாகியன.. வீடுகள் இடிந்ததில் 6 பேர் பலியாகினர். மேலும் மழை வெள்ளத்தில் ஒரு சிலர் அடித்து செல்லப்பட்டு மாயமாகி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று ஆந்திரா அரசு அறிவித்துள்ளது.
சமீபத்தில் கேரள வயநாட்டில் பெய்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு 300க்கும் மேற்ப்பட்டோர் உயிரிழந்த நிலையில் தற்போது ஆந்திரவிலும் 8 பேர் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.