சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணு கைது..!
சென்னையில் உள்ள அசோக் நகர் பகுதியில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் சார்பில், மாணவர்களுக்கு மோடிவேஷன் அளிக்கும் வகையிலான நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், இந்த நிகழ்ச்சியில் உரையாற்றுவதற்கு, பரம்பொருள் என்ற அறக்கட்டளையை சேர்ந்த மகாவிஷ்ணு என்பவரை, பள்ளி நிர்வாகத்தினர் அழைத்துள்ளனர்.
அவர்களின் அழைப்பை ஏற்று நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட மகாவிஷ்ணு, மாற்றுத்திறனாளி மாணவர்களின் மனம் வருந்தும் வண்ணம் பேசியிருந்தார். மேலும், முன்ஜென்மத்தில் செய்த பாவத்தின் விளைவாக தான், இந்த ஜென்மத்தில் மாற்றுத்திறனாளிகளாக பிறந்துள்ளீர்கள் என்றும் அவர் பேசியிருந்தார்.
இவரது இந்த பேச்சு, பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியிருந்தது. இவரது பேச்சுக்கு, பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களது கண்டனங்களை எழுப்பி வந்தனர். இந்நிலையில், இவர் மீது புகார் அளித்ததால், காவல்துறை தரப்பில், வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையில், மகாவிஷ்ணு தலைமறைவாக இருந்ததாக கூறப்பட்டது. இவ்வாறு பல்வேறு பரபரப்பான திருப்பங்கள் நடந்து வந்த நிலையில், இன்று, சென்னை விமான நிலையத்தில், மகாவிஷ்ணுவை காவல்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து, அவரை காவல்நிலையம் அழைத்து சென்றுள்ள காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு, வீடியோ ஒன்றை வெளியிட்டு மகாவிஷ்ணு விளக்கம் அளித்துள்ளார். அந்த விளக்கத்தில், நான் எதற்காக ஓடி ஒளிய வேண்டும். ஓடி ஒளியக்கூடிய அளவுக்கு அப்படி என்ன கருத்தை நான் சொல்லிவிட்டேன் என்று கூறியுள்ளார்.